ரூ.8.50 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் தடுப்பணை மற்றும் வெலிங்டன் ஏரி மேம்பாட்டு பணிகளை அமைச்சர் ராஜ்குமார் ஆய்வு
திட்டக்குடி, ஜூன் 21:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுக்குளம் பகுதியில் ரூ.8 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தடுப்பணை கட்டுமானப் பணிகள் மற்றும் வெலிங்டன் ஏரி நீர்த்தேக்கக் கரை, பிரதான கால்வாய் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள், விவசாயிகளின் நீர் தேவையை பூர்த்தி செய்வதோடு, மழைக்காலங்களில் நீர் சேமிப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆய்வின்போது, பணிகளின் தற்போதைய நிலை, தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், திட்டக்குடி சப்-கலெக்டர் சரண்யா, தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், மாவட்ட செயலாளர் விஜய், வட்டாட்சியர் உதயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ.) சண்முகசிகாமணி, காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், கோபிநாத், ஒப்பந்ததாரர் முருகன், வெலிங்டன் நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர்கள் பிரசன்னா, வெங்கடேசன், சுதர்சன், கெளதமன், மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், ஒன்றிய செயலாளர்கள் நீலகண்டன், அரவிந்த், சூர்யா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.






