பாப்பாக்குடி ஊராட்சியை இரண்டாகப் பிரிக்க கோரி அமைச்சரிடம் மனு


பாப்பாக்குடி ஊராட்சியை இரண்டாகப் பிரிக்க கோரி அமைச்சரிடம் மனு

சேர்மாதேவி, ஜூன் 16:

திருநெல்வேலி மாவட்டம் சேர்மாதேவி வட்டத்துக்கு உட்பட்ட பாப்பாக்குடி ஊராட்சியை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்க வேண்டும் என ஊர் மக்கள் சார்பில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும், மாநில பொதுச் செயலாளருமான என். ஆனந்த் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பாக்குடி ஊராட்சியில் அரியபுரம் காலனி, இலந்தைகுளம், ஓடைக்கரை துலுக்கப்பட்டி, குமாரசாமியாபுரம், கீழப்பாப்பாக்குடி காலனி, கீழப்பாப்பாக்குடி, மேலப்பாப்பாக்குடி, புதுக்கிராமம், ரஸ்தாவூர், நந்தன்தட்டை, சிவகாமிபுரம், அமர்நாத் காலனி உள்ளிட்ட 12 கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசித்து வருகின்றனர்.

பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் மிகப்பெரிய ஊராட்சியாக உள்ள பாப்பாக்குடி ஊராட்சியை ஒரே நிர்வாக அமைப்பின் கீழ் செயல்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் நிலவுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாயத்து அலுவலகம் பாப்பாக்குடியில் அமைந்துள்ளதால், தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பஞ்சாயத்து சேவைகளைப் பெற சுமார் 10 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பெரிய பரப்பளவு மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட இந்த ஊராட்சிக்கு, பிற ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் அதே அளவிலான வளர்ச்சி நிதியே ஒதுக்கப்படுவதால், அனைத்து கிராமங்களுக்கும் சமமான அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஓடைக்கரை துலுக்கப்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு, ஓடைக்கரை துலுக்கப்பட்டி, இலந்தைகுளம், குமாரசாமியாபுரம் மற்றும் அரியபுரம் காலனி ஆகிய நான்கு கிராமங்களை இணைத்து தனி ஊராட்சி அமைக்க வேண்டும் என ஊர் மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மாவட்ட இணைச் செயலாளர், மாவட்ட துணைச் செயலாளர், மாவட்ட பொருளாளர் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.