சென்னை: அரசியலுக்கு விரைவில் வரப்போவதாக நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். சமீபத்தில் அவர் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என தகவல் பரவியது. இதை மறுக்காத அவர், தனது முக்கிய முடிவு குறித்து 12ம் தேதி (நேற்று) அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். ரசிகர்களிடம் நேரடியாக கருத்துக்கேட்ட ராகவா லாரன்ஸ், தனது சமூக வலைதள பக்கத்தில் நேற்று வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்று தெரிந்த உடனே, நானும் அரசியலுக்கு வருகிறேன் என அப்போது ட்வீட் போட்டுவிட்டு நேராக வீட்டுக்கு சென்று என் அம்மாவிடம் சொன்னேன். ஆனால், என் அம்மாவுக்கு நான் அரசியலுக்கு வருவதில் கொஞ்சமும் விருப்பமில்லை. அரசியல் ஒரு சாக்கடை, அங்கே பணம் கொடுத்துதான் வாக்குகளைப் பெற்று ஜெயிக்கிறார்கள்.
ஜாதி இல்லை என்று வெளியில் சொல்வார்களே தவிர, ஜாதி, மதம் எல்லாமே அரசியலுக்குள் இருக்கிறது. அந்த சாக்கடைக்குள் நீ போக வேண்டாம் என்று தடுத்தார். அதனால் அப்போது நான் அரசியலுக்கு வரவில்லை. இப்போது நான் என் அம்மாவிடம் சென்று, அரசியலுக்கு போகட்டுமா என்று கேட்டேன். அதற்கு என் அம்மா, தாராளமாகப் போய் சேரு, நீ நினைத்ததை மக்களுக்காகச் செய் என்று பச்சைக் கொடி காட்டிவிட்டார். அதன் பிறகுதான் நான் அரசியலுக்கு வரலாம் என்ற முடிவையே எடுத்தேன். இந்த வீடியோவை பார்த்த பிறகு உங்களுடைய ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் கருத்துகளில் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் (ரசிகர்கள்) ‘வேண்டாம்’ என்று சொன்னால், நான் அரசியலுக்கு வரமாட்டேன். எனது சுயநலமற்ற சமூக சேவையைத் தொடர்ந்து செய்வேன். ‘ஆம்’ என்றால் அரசியலுக்கு தயாராக இருக்கிறேன். உங்களுடைய ஆசியுடன் இந்த அரசியல் பயணத்தை எப்போது, யாருடன் தொடங்கப் போகிறேன் என்பதை விரைவில் அறிவிப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார்.






