சென்னை: சென்னையில் இரவுநேர மின்தடையை சரி செய்ய, 10 சிறப்பு குழுக்கள் மற்றும் 125 நடமாடும் ரோந்து வாகன சேவையை, மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தொடங்கி வைத்தார்.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமைஅலுவலகத்தில், மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில், அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் எதிர்பாராத விதமாக ஏற்படும் மின்தடைகளை உடனுக்குடன் சரிசெய்யும் வகையில், 10 சிறப்பு குழுக்கள் மற்றும் 125 நடமாடும் ரோந்து வாகன சேவைகளை நேற்று தொடங்கி வைத்தார்.
மேலும், ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள 70 மின்தடை நீக்க மையங்களுடன் (மின்னகம் நீங்கலாக) கூடுதலாக, தற்போது, 77 புதிய மின்தடை நீக்க மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, 5 கருவி காப்பு சோதனை சிறப்பு குழுக்கள் (எம்.ஆர்.டி.), உயரழுத்த மின் புதைவட மின் கேபிள் பழுதுகளை உடனுக்குடன் கண்டறிந்து சரிசெய்யும் உபகரணங்களுடன் கூடிய 4 சிறப்பு வாகனங்களும், உயரழுத்த மற்றும் அதிஉயரழுத்த மேல்நிலை கம்பிகளில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய 7 வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.






