குவாரி நீரில் சடலமாக மீட்கப்பட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகி

குவாரி நீரில் சடலமாக மீட்கப்பட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகி
கடையம் அருகே பரபரப்பு; பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை

கடையம், ஜூன் 6:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே செயல்படாமல் இருந்த தனியார் குவாரி ஒன்றில் தமிழக வெற்றி கழக நிர்வாகியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையம் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் (37), தமிழக வெற்றி கழகத்தின் ஆலங்குளம் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றிய பொறுப்பாளராக இருந்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில், கடையம் அருகே செயல்படாமல் இருந்த தனியார் குவாரி ஒன்றில் தேங்கி இருந்த தண்ணீரில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கடையம் போலீசார், ஆலங்குளம் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் மாயமான சக்திவேல் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர் உயிரிழந்து சுமார் நான்கு நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழப்பிற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றி கழக நிர்வாகியின் திடீர் உயிரிழப்பு கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.