அதிமுகவின் ஆதரவை பெற்றால் தவெக ஆட்சிக்கு ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்: மார்க்சிஸ்ட், திருமாவளவன் எச்சரிக்கை

திருத்துறைப்பூண்டி: அதிமுகவின் ஆதரவை தவெக பெற்றால் ஆட்சிக்கு ஆதரவு முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம் எச்சரித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தவெகவுக்கு ஆதரவளித்திருப்பது மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க கூடாது. கொல்லைப்புறம் வழியாக பாஜ, ஆளுநர் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது.

108 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சி என்கின்ற முறையில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்குத்தான் இருக்கிறது என்ற அடிப்படையில் வெளியிலிருந்து ஆதரவு அளித்தோம். அதிமுகவை அமைச்சரவையில் சேர்த்து கொள்வது என்பது மக்கள் தீர்ப்புக்கு எதிரானது. நல்லாட்சி தருவேன் என்று கூறியதற்கு விரோதமாக இது அமைந்து விடும். மீறி, அதிமுகவின் ஆதரவை தவெக பெற்றால் எங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும்.

வழிபாட்டு கூடங்கள், கல்வி நிலையங்கள் அருகே உள்ள 717 மது கடைகள் மூடப்பட்டிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதுபோல் ரயில் நிலையங்களுக்கு அருகிலும் ஏராளமான மது கடைகள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வதால் அந்த கடைகளையும் உடனடியாக மூட வேண்டும். இந்த கடைகளில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவருக்கும் மாற்றுப்பணி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவின் உட்கட்சி பிரச்னை புதிது அல்ல. மக்களின் நலன் கருதி நடக்கும் பிரச்னை அல்ல. இதனை அக்கட்சியினர் சரி செய்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நிருபர்கனை சந்தித்தார். அப்போது அதிமுக தவெக-விற்கு ஆதரவு தெரிவித்தால் விசிக ஆதரவு திரும்ப பெறப்படுமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எங்கள் கட்சி தோழர்களுடன் கலந்து பேசி ஆலோசனை செய்வோம். அதிமுக ஒரு ஊழல் கட்சி என முதல்வர் விஜய் தெரிவித்து இருந்தார். மேலும் என் டி ஏ கூட்டணியில் இருந்த கட்சி பிஜேபி உடன் தீவிரமாக நட்புடன் இருக்கும் கட்சி. அதில் இருந்து சிலர் கட்சியை உடைத்துக் கொண்டு வந்து இந்த ஆட்சிக்கு ஆதரவு தருவது எங்களுக்கு பிரச்னை இல்லை. அது அவர்கள் உட்கட்சி விவகாரம். அது குறித்து எங்கள் கட்சி உயர்நிலை குழுவில் ஆலோசனை செய்து பேசுவோம்’’ என்றார்.