தாமிரபரணி ஆற்றில் துணிக்கழிவுகள் வீசினால் அபராதம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நெல்லை: நெல்லை தாம்பிரபரணி ஆற்றில் துணிக்கழிவுகள் வீசினால் அபராதம், வழக்கு பதிய மாவட்ட ஆட்சியர் உத்தரவு விடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பாபநாசம் மற்றும் அம்பாசமுத்திரம் பகுதிகளில் ஆற்றில் துணி கழிவுகளை மக்கள் வீசி வருகின்றனர் இதனால் அந்தந்த பகுதிகளில் ஆய்வு செய்து வழக்கு பதிய மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவு விதித்துள்ளார்.

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் கோடைகால தூர்வாரும் தூய்மை பணி தீவிரம்
21 நாள் திட்டத்தின் 12-வது நாள் பணிகள் சிறப்பாக நடைபெற்றது
பாபநாசம், மே 18:
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் கோடைகால தூர்வாரும் மற்றும் தூய்மை பணிகள் இன்று (18.05.2026) தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
பாபநாசம் யானைப்பாலம் முதல் தலையணை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஆற்றை சுத்தப்படுத்தும் நோக்கில் 21 நாட்கள் திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் 12-வது நாள் பணிகள் இன்று பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன.
ஆற்றிலிருந்து துணிகள் அகற்றம்
கோயில் முன்பகுதி தெற்கு அம்பாள் படித்துறை அருகே ஆற்றுக்குள் புதைந்து கிடந்த மற்றும் கல் பாறைகளில் சிக்கியிருந்த பழைய துணிகள் அகற்றப்பட்டன. இரண்டு கார்டியூப்களின் உதவியுடன் அவை கரைக்கு கொண்டு வரப்பட்டன.
மேலும், கோயில் தெற்குவாசல் படித்துறை பகுதியில் இருந்து துணிகள் அகற்றப்பட்டதுடன், அங்கு கிடந்த அஸ்திக் கலயங்களும் சேகரிக்கப்பட்டு கரையில் வைக்கப்பட்டன. இவை வெள்ளத்தால் ஏற்பட்ட கரையோர பள்ளங்கள் மற்றும் பிளவுகளை மூடி கரையை பலப்படுத்த பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கழிவுகளை பொட்டலங்களாக கட்டும் பணி
ஆற்றிலிருந்து அகற்றப்பட்ட துணிக் கழிவுகள் நகராட்சி கிடங்கிற்கு எடுத்துச் செல்ல வசதியாக சிறிய பொட்டலங்களாக கட்டப்பட்டன.
நகராட்சி வாகனங்களில் ஏற்றம்
சிறு பொட்டலங்களாக கட்டப்பட்ட துணிக் கழிவுகள் நகராட்சி பணியாளர்களின் உதவியுடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணியில் ஒத்துழைத்த விக்கிரமசிங்கபுரம் நகராட்சியினருக்கு தூய்மை பணி குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
பாபநாசம் பகுதியில் இன்று பொதுமக்கள் அதிக அளவில் திரண்டிருந்ததால், ஆற்றில் துணி மற்றும் கழிவுகளை வீசுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நோட்டீசுகள் வழங்கப்பட்டன.
மேலும், ஆற்றில் சுழல் மற்றும் ஆழமான பகுதிகள் குறித்து எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டு, உயிரிழப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இன்று அகற்றப்பட்ட கழிவுகள்:
வேண்டாத துணிகள் – 3.50 டன்
வெட்டிய செடிக் கழிவுகள் – 1.65 டன்
அஸ்தி கலயங்கள் – 750 கிலோ
பிளாஸ்டிக் கழிவுகள் – 150 கிலோ
சோப்பு, ஆயில், ஷேம்பு கவர்கள் – 60 கிலோ
நாப்கின்ஸ், டைப்பர்கள் – 50 கிலோ
சுட்ட செங்கற்கள் – 200 கிலோ
இதர கழிவுகள் – 30 கிலோ
சமூக ஆர்வலர்களின் பங்களிப்பு
இன்றைய பணிகளுக்கு கல்லிடைக்குறிச்சி சோசியல் சேவா அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பத்மநாபன், ஓய்வு பெற்ற வேளாண்மை துணை அலுவலர் ராஜகோபால், திருநெல்வேலி தலைமை ஆசிரியை கலாவல்லி உள்ளிட்டோர் உதவியளித்தனர்.
மேலும், எக்ஸ்னோரின் செயல் கள அலுவலர் கபடி முருகன் நேரில் வந்து தூய்மை பணியில் ஈடுபட்டவர்களை உற்சாகப்படுத்தினார்.
இன்றைய பணிகளில் செல்லத்துரை, மாரி, சங்கர் ஒய்யா, அம்பைதுரை, பி.செல்லத்துரை மற்றும் சமூக ஆர்வலர் சுதர்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த தூய்மை பணிகளை கிரிக்கெட் மூர்த்தி, ஓய்வு பெற்ற புள்ளியியல் உதவி இயக்குநர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் தலைமையில் தூய்மை பணி குழுவினர் ஒருங்கிணைத்து வருகின்றனர்.