மாட்டுவண்டியில் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

மாட்டுவண்டியில் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
அம்பாசமுத்திரம், மார்ச் 30:
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முனைவர் நத்தம் சிவசங்கரன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதனை முன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில், ஏர் உழவு களப்பையுடன் மாட்டுவண்டி ஓட்டி ஊர்வலமாக வந்தார். கூனியூர் கிராமத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் பத்தமடை பாய், காருக்குறிச்சி பானை, நெல் நாற்று, மரச்செப்பு பொருட்கள், வாழை உள்ளிட்ட அம்பாசமுத்திரம் தொகுதியின் அடையாளங்களை எடுத்துக்காட்டும் பொருட்கள் அணிவகுத்து கொண்டுவரப்பட்டன. மேலும், தொகுதி தேவைகளை வலியுறுத்தும் விழிப்புணர்வு பதாகைகளும் ஏந்தப்பட்டிருந்தன.

இந்த நிகழ்ச்சியில் ஆரோக்கிய ஜெகன் (வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்), செட்ரிக் சார்லஸ் (தலைமை தேர்தல் பொறுப்பாளர்), ஆனந்தராஜ் (சுற்றுச்சூழல் பாசறை மாநில துணைச் செயலாளர்), சுந்தர் (தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில துணைச் செயலாளர்), கொம்பையா (தொழிற்சங்க பொறுப்பாளர்), பர்னபாஸ் (மாவட்ட வணிகர் பாசறை பொறுப்பாளர்), அரவிந்த்சாமி (அம்பை தொகுதி பொறுப்பாளர்), சுப்பிரமணியன் (மாவட்ட செயலாளர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.