ஆளுநர் உத்தரவுப்படி பேரவையில் விஜய் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

சென்னை: தமிழக ஆளுநர் உத்தரவுப்படி தவெக தலைவர் விஜய் இன்று காலை சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை வாக்கெடுப்பு மூலம் நிரூபிக்க உள்ளார்.

இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும். அப்போது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடைபெறும் என்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். தவெக ஆட்சிக்கு காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளதால் இன்று நடைபெறும் கூட்டத்தில் விஜய் பெரும்பான்மை பெறுவது உறுதியாகி உள்ளது. தற்போது விஜய், திருச்சி கிழக்கு தொகுதியின் வெற்றியை ராஜினாமா செய்தார்.

மேலும், திருப்பத்தூர் எம்எல்ஏ ஓட்டெடுப்பில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் அரசுக்கு இதுவரை ஆதரவு தெரிவித்தவர்களின் பலம் 119 ஆக குறைந்துள்ளது.

அதேநேரத்தில், அதிமுகவின் ஒரு அணியான எஸ்.பி.வேலுமணி தலைமையிலான எம்எல்ஏக்களும் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் விஜய்க்கு பெரும்பான்மை கிடைப்பது உறுதியாகி உள்ளது.