தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்ட எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ்க்கு விசிகவில் முக்கிய பதவி: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்ட எஸ்.எஸ்.பாலாஜியை விசிக பொருளாளராகவும், ஆளூர் ஷாநவாஸை கட்சியின் முதன்மை செயலாளராகவும் நியமித்து திருமாவளவன் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 இடங்களில் போட்டியிட்டது. இதில் அந்த கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போதைய சட்டப்பேரவை தேர்தலில் விசிகவுக்கு கூடுதலாக 2 இடங்களைச் சேர்த்து 8 தொகுதிகளை திமுக ஒதுக்கியது.

இதில் தற்போது எம்எல்ஏக்களாக உள்ள எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகிய 3 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் 3 பேரும் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், ஒரு முறை கூட வாய்ப்பு கிடைக்காதவர்கள் பலர் இருப்பதால் இந்த முடிவு எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டதாக திருமாவளவன் விளக்கம் அளித்தார். தொடர்ந்து எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் பேசும்போது, ‘ஒரு கட்சியில் யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது தலைமையின் முடிவாகும் என்றும், அது எதுவாயினும் ஏற்றுக் கொள்வதே சிறந்த அறமாகும் என்றும்’ தெரிவித்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் இருவருக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கி அதிரடி அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார். அதில் விசிக பொருளாளராக திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜியும், மாநில முதன்மை செயலாளராக நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸும் நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ வெளியிட்ட சமூக வலைதள பதிவில்,‘‘விசிக தலைவர் திருமாவளவனுக்கு நன்றி என்பதை வார்த்தைகளால் உரைப்பதை கடந்து, இயக்கப்பணி செயல்களால் உணர்த்துவேன்” என்று தெரிவித்துள்ளார்.