திருப்பூரில் அண்ணாமலை கைது

திருப்பூர்: குப்பை கொட்டும் விவகாரத்துக்கு தீர்வு கோரி நடந்த போராட்டத்தில், பங்கேற்ற தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். அவரும், கிராம மக்களும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாநகரில் சேரும் குப்பையை இடுவாய், சின்னகாளிபாளையம் கிராமத்தில் கொட்ட ஐந்து கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் உள்ளது. கட்டுப்பாடுகளுடன் கொட்ட, கோர்ட் அனுமதி வழங்கியது.
குப்பையை பிரித்து கொட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, குப்பையை கொட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேல்முறையீடு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அந்தப் பகுதியில் குப்பைக் கொட்டக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் குப்பை கொட்ட சென்ற லாரிகளை கிராம மக்கள் தடுக்க முயன்ற போது, போலீசார் – பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்ற போது, மக்கள் தரப்பில் மண்டை, கை, கால் உடைப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 10 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், குப்பை விவகாரத்துக்கு தீர்வு காணக்கோரி பொது மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜவினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்த அண்ணாமலை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். அவரும், கிராம மக்களும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அந்த இடத்தில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டம் நடந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

கமிஷனுக்காக அரசியல்வாதிகள்

முன்னதாக போராட்டம் நடத்திய மக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது: ஆர்ப்பாட்டம் நடத்தலாம், போராட்டம் நடத்தலாம், அரசின் முகமுடியை கிழித்து மக்கள் முன் வைக்கலாம். இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும். மக்கள் கோபமாக இருக்கின்றீர்கள். இதற்கு நிரந்தர தீர்வு தேர்தல் என்பதை மறந்துவிடாதீர்கள். நாம் செய்ய வேண்டியது நாளையில் இருந்து செய்ய வேண்டிய வேலையை செய்வோம்.
இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு மேல் வசிக்கும் பெரு நகரங்களில் தூய்மைப்பணி குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் அசுத்த பட்டியலில், கடைசி இடத்தில் மதுரை. 28 வது இடத்தில் கோவை. 38 வது இடத்தில் சென்னை உள்ளது.3 லட்சம் பேருக்கு மேல் வசிக்கும் 95 நகரங்களில் பட்டியல் எடுக்கப்பட்டது.94வது இடத்தில் ஈரோடு. 77 வது இடத்தில் திருப்பூர்.

ஆனால், திமுக அரசியல்வாதி வட இந்தியர்களை பார்த்து வடக்கன் வடக்கன் என்கின்றனர். இந்தூர் முதல் இடத்தில் உள்ளது. வட இந்தியர்கள் என யாரை கொச்சைபடுத்துகிறமோ அவர்கள் நகரங்களை தூய்மையாக வைத்து இருக்கின்றனர். யார் வளர்ந்துவிட்டோம் என சொல்கிறோமோ நம் ஊரை குப்பைக்காடுகளாக மாற்றி, அரசியல்வாதிகள் கமிஷனுக்காக பணியாற்றுகின்றனர்.

நியாயமான முறையில் நேர்மையான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டோம். இடுவாய் கிராமத்துக்கு போகும் சாலையை அடைத்து விட்டனர். மாநகராட்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய இங்கு வந்தால், திருப்பூர் நகருக்குள் யாரையும் விடவில்லை. நாளையில் இருந்து போலீசாரை எப்படி வேலை வாங்க வேண்டுமோ அப்படி செய்வோம்.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு போலீஸ் இருக்க வேண்டும். அரசியல் கட்சி கூட்டத்துக்கு பின்னால் சுற்றுவதில் நம்பிக்கையில்லை. ஆனால், ஒரு அனுமதி மட்டும்தான் போலீசிடம் கேட்டோம். அவர்கள் கூறும் இடத்தில் சொல்லும் நேரத்தில் என்ன நிபந்தனை போட்டாலும் ஏற்றுக் கொள்கிறோம் என்றோம். அவர்கள் போட்ட நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டோம். ஆனாலும் அனுமதி வழங்கவில்லை. இதுதான் ஜனநாயகமா?

நான் என்ன தவறு செய்தேன். இங்கு இருக்கும் மக்களை பார்க்க வந்தால் கோவையில் ஏன் கைது செய்ய வருகிறீர்கள். மருத்துவமனையில் இருக்கும் தந்தையை பார்க்க போனால், அங்கு கைது செய்ய வருகிறீர்கள்?

இங்கு இருக்கும் மக்கள் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்தால் ஏன் கைது செய்கிறீர்கள். இந்த ஊரில் சட்டம் ஒழுங்கு உள்ளதா? நியாயம் உள்ளதா?பெண்களை பலாத்காரம் செய்பவன் தைரியமாக சுத்துகிறான். பெண்கள் மீது கை வைக்கிறவன் தைரியமாக சுத்துகிறான். யாருக்கும் கைது கிடையாது. நேர்மையாக, நியாயமாக குரல் கொடுக்க அப்பாவி வந்தால் கைது பண்ணுகிறீர்கள். இங்கு ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா? இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

குரல் ஒலிக்கும்

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்தில், பொதுமக்கள் விருப்பத்திற்கு எதிராக குப்பைக்கிடங்கு அமைக்கும் பணியை நிறுத்தக் கோரி, பொதுமக்களோடு இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த, திமுக அரசு அனுமதி மறுத்ததோடு மட்டுமல்லாமல், தமிழக பாஜவின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீநிவாசன் மற்றும் நான் உட்பட பாஜ தொண்டர்களைக் கைது செய்திருக்கிறது காவல்துறை.
நாட்டிலேயே, தூய்மையான பெருநகரங்களில், சென்னை, மதுரை, கோவை மற்றும் சிறு நகரங்களில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்டவை கடைசி இடங்களில் இருக்கின்றன. கமிஷன் வாங்குவதற்காக மட்டுமே, திருப்பூர் மாநகரத்தையே குப்பைக்கிடங்காக்கி வைத்திருக்கிறது திருப்பூர் மாநகராட்சி. திருப்பூர் மாநகர திமுக மேயர், இதற்காக மட்டுமே பதவியில் இருக்கிறார்.

பொதுமக்கள் எத்தனை போராட்டம் நடத்தினாலும், திருப்பூருக்கான நிரந்தரத் தீர்வு, தேர்தலில் மக்கள் அளிக்கப் போகும் வாக்குகள்தான். வரும் தேர்தலில், இந்த மக்கள் விரோத திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.ஜனநாயக முறைப்படி, இடுவாய் கிராம பொதுமக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்க அனுமதி தர மறுத்து, எங்களைக் கைது செய்து அடக்குமுறையைக் கையாளும் திமுக அரசும், காவல்துறையும், நாளை முதல் வேறு வேறு வடிவங்களில் பொதுமக்களின் போராட்டத்தைச் சந்திப்பார்கள் என்பதைக் கூறிக் கொள்கிறேன்.

திமுக அரசின் ஒடுக்குமுறைக்கும் கைது நடவடிக்கைகளுக்கும் என்றும் அஞ்சோம். இடுவாய் மக்களின் குரலாக எங்கள் குரல் என்றும் ஒலிக்கும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பாஜ அஞ்சாது!

இது குறித்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை: அண்ணாமலை மற்றும் பாஜ நிர்வாகிகளை ஏவல்துறை கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மக்கள் குடியிருக்கும் பகுதியில் குப்பையை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியதோடு போராடும் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய திமுக அரசுக்கு தமிழக பாஜ சார்பாக ஏற்கனவே நான் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இன்று மக்கள் போராட்டத்திற்கு பாஜவின் ஆதரவைத் தெரிவிக்க வந்த தாமரை சொந்தங்களையும் திமுக அரசு கைது செய்திருப்பது அதன் பாசிச போக்கை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
அறவழியில் போராட முயன்ற தலைவர்களை சர்வாதிகார முறையில் அடக்கி ஒடுக்க முனையும் திமுக அரசுக்கு, குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த திராணியில்லையா? அல்லது மனமில்லையா? மொத்தத்தில், பொதுமக்கள் நலனை தூக்கியெறிந்து, பாசிசத்தை மட்டுமே தூக்கிப் பிடிக்கும் திமுக அரசு தனது அகங்காரத்தாலேயே வீழும் நாள் தொலைவிலில்லை. திமுக அரசின் பாசிச போக்கிற்கு பாஜ அஞ்சாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.