வீரவநல்லூர் கூட்டுறவு நகர வங்கியின் 3-வது புதிய கிளை கங்கணான்குளத்தில் திறப்பு

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் கூட்டுறவு நகர வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 3-வது புதிய கிளை அலுவலகம் கங்கணான்குளத்தில் திறப்பு விழாவுடன் செயல்பாட்டுக்கு வந்தது.

இதையொட்டி நடைபெற்ற திறப்பு விழாவிற்கு நெல்லை மண்டல இணைப் பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். சேரன்மாதேவி சரக துணைப் பதிவாளர் ராஜேஸ்வரன் ரிப்பன் வெட்டி புதிய கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். கூட்டுறவு சார்பதிவாளர் மாலா குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

புதிய கிளை திறக்கப்பட்டதன் மூலம் கங்கணான்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கூட்டுறவு வங்கியின் சேவைகளை தங்கள் பகுதிக்கு அருகிலேயே எளிதாகப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

விழாவில் சேரன்மாதேவி கூட்டுறவு சார்பதிவாளர் கோயில் மணி, முன்னாள் பொது மேலாளர் குப்புசாமி, பொது மேலாளர் ரவிக்குமார், வழக்கறிஞர் சந்தனகுமார், கிளை மேலாளர்கள், வங்கி பணியாளர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய கிளைக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

வீரவநல்லூர் கூட்டுறவு நகர வங்கியின் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளதற்கு கங்கணான்குளம் பகுதி பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.