நடைமேடை நீட்டிப்பு பணிகள் குறித்து நேரில் பார்வை – பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை மனு
அம்பை, செப். 24:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் நடைமேடை நீட்டிப்பு பணிகள் மற்றும் ரயில் நிலையத்தை தரம் உயர்த்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைமேடை நீட்டிப்பு பணிகள், நிலையத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தரம் உயர்த்துவதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோட்ட மேலாளர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
அப்போது, கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் கவிஞர் கல்லிடைக் குயில் உமர் பாரூக், ரயில் நிலையத்தின் வளர்ச்சி மற்றும் பயணிகளின் நலன் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோட்ட மேலாளரிடம் வழங்கினார்.
அந்த மனுவில், செங்கோட்டையில் இருந்து கல்லிடைக்குறிச்சி வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும், கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்திற்கு ‘பிளாக் ஸ்டேஷன்’ அந்தஸ்து வழங்கி தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
மேலும், கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ரயில் பயணத் தேவைகளை கருத்தில் கொண்டு, ரயில் சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து, கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ரயில் நிலையம் முழுவதும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் அப்துல் சமது, தானிஷ், சீதாராமன், மோகன், முகமது ஷரீஃப், வீரப்பபுரம் கார்த்திக், ஆஸாத், கூடலரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






