150-க்கும் மேற்பட்டோருக்கு ராக்கி அணிவிப்பு – போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
அம்பாசமுத்திரம், செப். 13:
அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியில் பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் சார்பில் ரக்ஷாபந்தன் விழா மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வெள்ளங்குளி சௌராஷ்டிரா மீட்டிங் ஹாலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, சகோதரத்துவம், அன்பு, பாதுகாப்பு மற்றும் நல்லொழுக்கத்தை வலியுறுத்தும் வகையில் ரக்ஷாபந்தன் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர் பிரம்மா குமார் கெடன் சிவபாலன்ஜி சிறப்புரையாற்றினார். பரமாத்மா சிவத்தந்தையின் அன்பு, சக்தி மற்றும் நற்குணங்களை அனுபவிப்பதன் மூலம் மன அமைதியையும் ஆன்மிக வலிமையையும் பெறுவது குறித்தும், பரமாத்மாவின் குடை நிழலில் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்தும் அவர் விளக்கிப் பேசினார்.
தொடர்ந்து, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட பொறுப்பாளர் பிரம்மா குமாரி புவனாஜி, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 150-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ராக்கி அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். ரக்ஷாபந்தன் விழாவின் மூலம் சகோதரத்துவ உணர்வு, அன்பு, ஒற்றுமை மற்றும் சமூக நலன் ஆகியவற்றை வளர்ப்பதன் அவசியம் எடுத்துரைக்கப்பட்டது.
அம்பாசமுத்திரம் கிளை பொறுப்பு சகோதரி பிரம்மா குமாரி உமா, அனைவருக்கும் சிவத்தந்தையின் சக்தியை உணர்த்தும் வகையில் தியானப் பயிற்சியை நடத்தினார். இதன் மூலம் மன அமைதி, நல்ல சிந்தனை மற்றும் தீய பழக்கங்களில் இருந்து விலகுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், போதைப் பழக்கத்தால் ஏற்படும் உடல், மன மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், போதைப் பொருட்களை முற்றிலும் தவிர்த்து, ஆரோக்கியமான மற்றும் நல்லொழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்வோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
ரக்ஷாபந்தன் விழாவுடன் இணைந்து நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.






