முதலியார்பட்டியில் மின்தடையை கண்டித்து 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்!முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவுக்கு கடும் எதிர்ப்பு

முதலியார்பட்டியில் மின்தடையை கண்டித்து 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்!

சமாதானப்படுத்த வந்த முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவுக்கு கடும் எதிர்ப்பு – “திரும்பிப் போ” என கோஷம்; போலீசார் சமரசம்

அம்பை, செப். 12:

விக்கிரமசிங்கபுரம் அருகே முதலியார்பட்டியில் தினமும் இரவு நேரங்களில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று இரவு மெழுகுவர்த்தி மற்றும் தீப்பந்தங்களை ஏந்தி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முதலியார்பட்டி, கோட்டவிளைப்பட்டி, கொண்டையன்பட்டி மற்றும் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியின் 1-வது வார்டு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்றனர். விக்கிரமசிங்கபுரம் நகராட்சி 1-வது வார்டு கவுன்சிலரும், அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான இமாக்குலேட் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்தடையால் பொதுமக்கள் ஆவேசம்

இரவு நேரங்களில் தொடர்ந்து ஏற்படும் மின்தடையால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், மின்தடைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனை கண்டிக்கும் வகையில் கையில் மெழுகுவர்த்தி மற்றும் தீப்பந்தங்களை ஏந்தியபடி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு

இதற்கிடையே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. டாக்டர் இசக்கி சுப்பையா அங்கு வந்தார். அவருக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களில் சிலர் முன்னாள் எம்.எல்.ஏ.வை பார்த்து “திரும்பிப் போ” என கோஷமிட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

போலீசார் சமரசம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. கணேஷ்குமார் தலைமையிலான போலீசார், முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். தொடர்ந்து அனைவரையும் அங்கிருந்து கலைந்து செல்லச் செய்தனர்.

தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே மின்தடை – அதிகாரிகள் உறுதி

இதற்கிடையே தகவலறிந்து மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தற்போது மின்பற்றாக்குறை அதிகமாக இருப்பதால் மின்தடை ஏற்படுவதாக தெரிவித்த அதிகாரிகள், இனிமேல் தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே மின்தடை ஏற்படும் என பொதுமக்களிடம் உறுதியளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மின்தடையை கண்டித்து நடைபெற்ற போராட்டம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக எழுந்த கோஷங்களால் முதலியார்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.