வருகிற 26 ஆம் தேதி பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமானத்தை ஓடுதளத்தில் தரையிறக்கி ஒத்திகை பார்க்கப் பட்டது.
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் ரூ. 381 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் திறப்பு வருகிற 26 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு விமான நிலையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்காக மாலத்தீவில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி விமானத்தில் தூத்துக்குடிக்கு அவர் வருகிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் பிரதமர் மோடி தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். மேலும் செட்டிநாடு கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலைய பயணிகள் முனையம், முத்து நகரத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் முத்துக்கள், சுதேசி கப்பல் இயக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கப்பல் வடிவம் ஆகியவற்றை பிரதமர் மோடி நடந்து சென்று பார்வையிடுகிறார்.
அதன் பிறகு விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று தமிழ்நாட்டில் மத்திய அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்ட பணிகளையும் தொடங்கி வைத்து பேசுகிறார்.
அதன்படி ரூ. 381 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையம் தஞ்சை விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் இரண்டாம் கட்டமான சோழபுரம் முதல் சேத்தியாதோப்பு வரை ரூ.2,357 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை ரூ.200 கோடி மதிப்பீட்டில் ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ள தூத்துக்குடி துறைமுக சாலை, ரூ.99 கோடி மதிப்பீட்டில் மதுரை போடிநாயக்கனூர் இடையே மின் மயமாக்கப்பட்டுள்ள ரயில் பாதை ரூ. 250 கோடி மதிப்பீட்டில் நாகர்கோவில் -டவுன்- நாகர்கோவில் சந்திப்பு- கன்னியாகுமரி இடையிலான இரட்டை இரயில் பாதை, ரூ.283 கோடி மதிப்பீட்டில் ஆரல்வாய்மொழி நாகர்கோவில் சந்திப்பு மற்றும் நெல்லை மேலப்பாளையம் இடையிலான இரட்டை ரயில் பாதை ஆகிய ரூ.3970 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரூ.548 கோடி மதிப்பீட்டில் அலகு 3,4-ல் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றுவதற்கான மின் பரிமாற்ற அமைப்புக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும் சில திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக சுமார் 4500 கோடி மதிப்பிலான திட்ட பணிகள் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் வருகையும் முன்னிட்டு இரவு நேரத்தில் விமானத்தை ஓடுதளத்தில் தரையிறக்கி ஒத்திகை பார்க்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதற்காக இந்திய விமானப்படை விமானம் இரவு 7 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமானத்தை இரண்டு முறை தரையிறக்கி அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர் இரவு 7.30 மணி அளவில் அந்த விமான புறப்பட்டு சென்றது.






