சேலத்தில் பயங்கர தீ விபத்து: பனியன் கம்பெனியில் பற்றிய தீயில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!

சேலம்: தீபாவளி பட்டாசு காரணமாக, சேலத்தில் உள்ள பிரபல பனியன் கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், ரூ. 40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாநகரின் களரம்பட்டி பகுதியில் ஜெகதீஸ் என்பவருக்கு தொந்தமான பனியன் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் நேற்று இரவு திடீர் தீவிபத்து ஏற்பட்டது.  தீபாவளி பண்டிகையை ஒட்டி அந்த பகுதியில் உள்ளவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்த நிலையில்,  பட்டாசு ஒன்று, அந்த நிறுவனத்திற்குள் விழுந்ததில், தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால்,  நிறுவனத்துக்குள் இருந்த பொருட்களில் தீ பற்றியது. தொடர்ந்து தீ மளமளவென எறிந்து குடோன் முழுவதும் பரவியது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அவர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 40 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எறிந்து நாசமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. தீ விபத்து குறித்து செவ்வாய்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.