திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

ஆவணி திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 25-ந் தேதி வரை 12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

திருச்செந்தூர், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இத்திருவிழா 25-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.
இத்திருவிழாவை யொட்டி முதல் நாளான இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 5 மணிக்கு திருவிழா கொடியேற்றப்பட்டது. மாலையில் அப்பர் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்கசப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
8-ம் திருநாளான 21-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.பகல் 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் வருகின்ற 23-ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி நடக்கிறது.
பக்தர்கள் வசதிக்காக திருவிழா நாட்களில் தட்டுப்பாடு இன்றி குடிதண்ணீர் வழங்கவும், தடையின்றி மின்சாரம் வழங்கவும், முக்கிய திருவிழா நாட்களான வருகிற 20-ந் தேதி முதல் 23-ந் தேதி 10-ம் திருநாள் தேரோட்டம் வரை நெல்லை, தூத்துக்குடி, சாத்தான்குளம், நாகர்கோவில் மார்க்கத்தில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
திருவிழா நாட்களில் 500-க்கும் மேற்பட்ட போலீசாரும், முக்கிய விழா நாட்களில் 750-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.