நெல்லை: நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னரை புறக்கணித்து விட்டு துணைவேந்தர் சந்திரசேகரிடம் நாகர்கோவில் மாணவி பட்டம் பெற்றார். தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் கவர்னரிடம் பட்டம் பெற விரும்பவில்லை என அவர் தெரிவித்தார். இதனால் பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா நேற்று நண்பகல் 12 மணிக்கு பல்கலைக்கழக அரங்கில் நடந்தது. விழாவில், கவர்னர் ஆர்என்.ரவி கலந்து

கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் வரிசையாக வந்து கவர்னரிடம் பட்டம் பெற்றனர். அப்போது, நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி ஜீன் ஜோசப் கவர்னரிடம் பட்டம் பெறாமல் அவரை புறக்கணித்து விட்டு அடுத்து இருந்த துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டம் பெற்றார். இதனால், பட்டமளிப்பு விழா அரங்கில் இருந்த மாணவ, மாணவிகள், பெற்றோர், பேராசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மாணவி ஜீன் ஜோசப் அளித்த பேட்டி: நான் நாகர்கோவில் எஸ்டி இந்துக் கல்லூரியில் பிகாம் படித்தேன். பின்னர், சிவகாசி மெப்கோ கல்லூரியில் எம்பிஏ முடித்தேன். தற்போது நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் பிஎச்டி முடித்துள்ளேன். அதற்கான பிஎச்டி பட்டம் பெறுவதற்காக வந்தேன். தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கு எதிராக
செயல்படும் கவர்னரிடம் பட்டம் பெற நான் விரும்பவில்லை. தமிழ்நாட்டிற்காக கவர்னர் என்ன செய்தார். அவர் எதுவும் செய்யவில்லை. அதனால், அவர் கையால் பட்டம் பெற விரும்பவில்லை. எனவே, அவரை புறக்கணித்து விட்டு துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டம் பெற்றேன்.
நான் திராவிட மாடலை பின்பற்றுகிறேன். முதல்வர் இருக்கிறார். உயர் கல்வித் துறை அமைச்சர் இருக்கிறார். இதற்காக, ஒரு சிஸ்டம் உள்ளது. இது நான் சுயமாக, தைரியமாக எடுத்த முடிவு. நான் துணைவேந்தரிடம் பட்டம் பெற்று எனது இருக்கைக்கு வந்தவுடன் சுற்றியுள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் எனது தைரியத்தை பாராட்டினர். எங்களுக்கும் அந்த எண்ணம் இருந்தது என்றனர். அப்போது தான் இதுபோன்ற உணர்வு எல்லோரிடமும் உள்ளது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார். மாணவி ஜீன் ஜோசப் மைக்ரோ பைனான்ஸ் பிரிவில் நேற்று பிஎச்டி முனைவர் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






