இந்தியா இங்கிலாந்து இடையே வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பிரதமர்கள் மோடி – கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் வேளாண் பொருட்கள், மீன், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் 99 சதவீத இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு முற்றிலும் வரி நீக்கப்பட்டுள்ளது. இதே போல இங்கிலாந்தின் கார் மதுபானங்களுக்கு சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை நேற்று சந்தித்து பேசினார். இந்த பேச்சு வார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. விரிவான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தம் சி இ டி ஏ என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் பிரதமர்கள் மோடி, ஸ்டார்மர் முன்னிலையில் ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
கடந்த 3 ஆண்டுகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த மெகா ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பல 100 கோடி மதிப்பீட்டில் வர்த்தகம் அதிகரிக்கும். இங்கிலாந்தில் அனைத்து துறைகளிலும் இந்திய பொருள்களுக்கு விரிவான சந்தை அணுகலை உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவின் ஏற்றுமதி பொருள்களில் 100% வர்த்தக மதிப்புகளை உள்ளடக்கிய வேளாண்மை, ஜவுளி உள்ளிட்ட துறைகளில் 99 சதவீத பொருட்களுக்கு முற்றிலும் வரி நீக்கம் செய்யப்பட்டிருப்பது இந்த ஒப்பந்தத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. மஞ்சள், மிளகு, ஏலக்காய் போன்ற இந்திய முக்கிய வேளாண் பொருட்கள் மாம்பழக்கூழ் ,ஊறுகாய், பருப்பு வகைகள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் இறால் மற்றும் குணா போன்ற மீன் உணவுகள் இங்கிலாந்து சந்தையில் சுங்கவரி இல்லாத அணுகலை பெறும். இது அடுத்து மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் விவசாய ஏற்றுமதியை 20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் 100 பில்லியன் அமெரிக்க டாலர் விவசாய ஏற்றுமதி இலக்கை அடைவதற்கு பங்களிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
தேயிலை மற்றும் காபி ஆகிய ஏற்றுமதிக்கு முன்பு 10 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில் இனி வரி முற்றிலும் நீக்கப்படும். மசாலா பொருட்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் மீதான வரிகள் முன்பு 8 சதவீதத்திலிருந்து இனி பூஜ்ஜியமாக இருக்கும். பழங்கள் முன்னதாக 20 சதவீதம் வரையிலிருந்து பூஜ்ஜியம் ஆக்கப்படும். இது இங்கிலாந்து சந்தையில் இந்திய பொருட்களின் விலையை குறைக்க வழிவகிக்கும்.
இதே போல இங்கிலாந்தின் உற்பத்தி பொருட்களான இந்தியாவின் சராசரி வரி 15 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறையும். இதன் மூலம் இந்தியாவிற்கு குளிர்பானங்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் முதல் கார்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் வரை பொருள்களை விற்பனை செய்யும் இங்கிலாந்து நிறுவனங்கள் இந்திய சந்தையை அதிக அளவில் அணுகுவார்கள்.
இந்த ஒப்பந்தம் குறித்து இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கூறுகையில் நமது இரு நாடுகளுக்கும் “ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாகவும் நாம் ஒருவருக்கு ஒருவர் செய்து கொண்ட உறுதி மொழியை நிறைவேற்றும் நாளாகவும்” இன்று அமைந்துள்ளது என பிரதமர் மோடியை வாழ்த்தி வரவேற்றார்.
பிரதமர் மோடி பேசுகையில் இந்தியாவும் இங்கிலாந்தும் இயற்கையான கூட்டாளிகள். தற்போது இரு நாடுகளும் தங்கள் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதுகின்றன தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்திய ஜவுளி, காலணிகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், கடல் உணவு மற்றும் பொறியியல் பொருட்கள் இங்கிலாந்தில் சிறந்த சந்தை அணுக்களை பெறும். இந்த ஒப்பந்தம் இந்தியாவின் இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியா பிரிட்டன் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் ஆண்டுக்கு சுமார் 34 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.






