தொடர் மழையால் தண்ணீர் வரத்து அதிகரிப்பு குற்றால அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு

குற்றாலத்தில் பிரதான அருவிகளில் நேற்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் வெளியூரில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

குற்றாலத்தில் கடந்த ஒரு வாரமாக சாரல் பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. இதனால் தொடர்ந்து சில தினங்களாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தடாகத்தின் மீது தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. நேற்று அதிகாலை வேளையில் மழை பெய்தது. பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது இடையிடையே சாரலும் செய்தது.

மெயினருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் ஐந்தாவது நாளாகவும், ஐந்தருவி பழைய குற்றால அருவி ஆகியவற்றிலும் இரண்டாவது நாளாகவும், நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் வெளியூர்களிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் பிரதான அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அருவிகளில் தொடர் தடை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.