சேரன்மாதேவி குப்பையில் கிடந்த 122 ஆண்டு பழமையான விளக்கு தூணை புதுப்பித்து மீண்டும் நிறுவிய சமுக ஆர்வலர்கள்
சேரன்மாதேவி குப்பையில் கிடந்த 122 ஆண்டுகள் பழமையான விளக்குத்ததூணை புதுப்பித்து மீண்டும் நிறுவிய சமூக ஆர்வலர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1914-ம் ஆண்டு சேரன்மாதேவி சப் கலெக்டர் அலுவலகம் உதயமானது. சேரன்மாதேவி சப் கலெக்டர் அலுவலகம் அருகில் சாலையோரம், “மகுடாபிஷேக விளக்கு” என்ற பெயரில் அப்போதைய சேரன்மாதேவி பண்ணையாராகிய யுவாலு சோமாயாஜூலு என்பவரால் விளக்கு தான் அமைக்கப்பட்டது. 01-01-1903 தேதியிட்டு நிறுவப்பட்ட இந்த விளக்கத்துடன் எட்வார்ட் மன்னரின் மகுடாபிஷேக ஞாபக தீபம் என பெயரிட்டு நிறுவப்பட்டுள்ளது.
இத்தூணியில் கண்ணாடி குடுவையை தொங்கவிட்டு தீபம் ஏற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. சேரன்மாதேவி பகுதியில் அடையாளமாக இருந்த விளக்குத்தூண் கடந்த ஆண்டு சாலை விரிவாக்க பணியின் போது அகற்றப்பட்டது. பணிகள் முடிந்ததும் இந்த நினைவுத்தூண் மற்றும் கல்வெட்டு குப்பையில் போடப்பட்டது. இந்த நினைவுத்தூண் சிறப்புகள் குறித்து அறிந்த சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து, சேரன்மாதேவி அடையாளமாக இருந்த நினைவு விளக்கு துணை புதுப்பித்து மீண்டும் அதே இடத்தில் ஒளிரச் செய்தனர்.
புதுப்பித்த நினைவு விளக்குத்தூணை சேரன்மாதேவி மின்வாரிய உதவி செயற் பொறியாளர் கைலாசமூர்த்தி திறந்து வைத்தார். இதில் மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் பிரிஜிட் செலஸ், சமூக ஆர்வலர் மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






