Dhoni: இந்திய அணியில் எனக்குப் பிடித்த பவுலர் இவர்தான்! – தோனி பகிர்ந்த தகவல்

‘பேட்ஸ்மேனை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். ஏனென்றால் நம்மிடம் நிறைய நல்ல பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர்’- தோனி

இந்திய கிரிக்கெட் அணியில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக பும்ரா செயல்பட்டு வருகிறார்.

3 வகையான கிரிக்கெட்டிலும் துல்லியமாகவும் வேகமாகவும் பந்து வீசும் அவர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். குறிப்பாக நடந்து முடிந்த 2024 டி20 உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகளை அவர் எடுத்திருந்தார்.

தேவைப்படும் நேரங்களில் விக்கெட்டுகளை எடுத்து கொடுத்த பும்ரா இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அந்தத் தொடரில் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளர் என்று பல கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி வரும் நிலையில் தோனி தனக்கு பிடித்த பவுலர் ஜஸ்பிரித் பும்ராதான் என்று கூறியிருக்கிறார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டப்போது இதுதொடர்பாக பேசிய தோனி, “தற்போது மிகவும் பிடித்தவராக பும்ரா இருப்பதால் பவுலரை தேர்ந்தெடுப்பது மிகவும் எளிது. ஆனால் பேட்ஸ்மேனை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். ஏனென்றால் நம்மிடம் நிறைய நல்ல பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அதற்காக நம்மிடம் நல்ல பவுலர்கள் இல்லை என்று அர்த்தமில்லை.
தற்போது நமது பேட்ஸ்மேன்களில் நான் பார்க்கும் ஒருவர் நன்றாக பேட்டிங் செய்வது போல் தெரிகிறது. ஆனால் மற்றொருவரை பார்க்கும்போது அவரும் பேட்டிங்கில் அசத்துகிறார். எனவே இந்திய அணி நன்றாக செயல்படும் வரை நான் சிறந்த பேட்ஸ்மேனை தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. அவர்கள் தொடர்ந்து ரன்கள் அடிக்க விரும்புகிறேன். இருப்பினும் எனக்குப் பிடித்த பவுலரை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்” என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *