Vijay: நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு! விலை எவ்வளவு தெரியுமா?

கோஸ்ட் சீரிஸ் 1 மாடல். 2012-ல் ரிஜிஸ்ட்டர் பண்ணப்பட்ட அந்தக் காரின் ஓடோ மீட்டர் ரீடிங் 22,000 கிமீ.

ரோல்ஸ் ராய்ஸ்-க்கும் விஜய்க்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. காரணம் – அந்த இறக்குமதி வரி, நுழைவு வரி போன்ற சமாச்சாரங்கள். 2012-ல் ஒரு புத்தம் புது சொகுசு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வாங்கினார். ஒரு சொகுசு கார் வாங்கினால், அந்தக் காருக்கு இறக்குமதி வரி மட்டும் 137 சதவிகிதத்துக்கு மேல் இருந்தது.

அந்தக் காருக்கு  நுழைவு வரி ஒழுங்காகச் செலுத்தவில்லை என்று, தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், ‛‛ரீல் ஹீரோக்களாக மட்டும் இருக்காதீர்கள்; ரியல் ஹீரோக்கள் ஆகவும் இருங்கள். வரி என்பது நன்கொடையல்ல; அது ஒரு கட்டாயப் பங்களிப்பு!’’ என்று காட்டமாகக் கூறி, ஒரு லட்ச ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.

நிஜத்தில் அந்தக் காரில் பதிவு விஷயத்தில் நடந்த கோளாறால்தான் வரியில் குழப்பம் ஏற்பட்டு, விஜய்க்குக் கெட்ட பெயர் ஆனது. நிற்க! அந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் இப்போது செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.

Empire Autos எனும் ப்ரீமியம் கார் டீலர்ஷிப்பில், விஜய் பயன்படுத்திய அந்தக் காரை விற்பனைக்கு விட்டுள்ளார்கள். இன்ஸ்டா வலைதளத்தில் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார், 360 டிகிரியிலும் படம்பிடிக்கப்பட்டு, விற்பனைக்கு விடப்பட்ட செய்தி வைரலாகி இருக்கிறது.

‛காரில் எங்கேயுமே டென்ட் விழவில்லை; எந்த இடத்திலும் சிறு கீறல்கூட இல்லை; கார் நல்ல ஓடும் கண்டிஷனில் இருக்கிறது; சர்வீஸ் ஹிஸ்டரியெல்லாம் பக்காவாக உள்ளது; காருக்கு வெள்ளபாதிப்பு எதுவும் இல்லை; காரில் உள்ள எலெக்ட்ரானிக் சமாச்சாரங்கள் கோளாறில்லாமல் பக்காவாக வேலை பார்க்கின்றன; ரோல்ஸ்ராய்ஸ் கம்பெனியின் ஃபேக்டரி ஃபிட்டட் சமாச்சாரங்கள் எதிலும் கை வைக்கவில்லை’ என்று காரைப் பற்றி ஹைலைட் செய்திருக்கிறார்கள் டீலர்ஷிப்பில்.

மினிகூப்பர், இனோவா, பிஎம்டபிள்யூ என்று பல கார்கள் வைத்திருந்தாலும் விஜய், இந்தக் காரை அவரேதான் செல்ஃப் டிரைவ் செய்வது வழக்கமாம். பொது நிகழ்ச்சிகள், சினிமா ஈவென்ட்கள் போன்றவற்றுக்கு இந்த ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரைத்தான் பயன்படுத்துவாராம் விஜய். ‛பீஸ்ட்’ படத்தின் ஷூட்டிங் நிறைவு நாள் அன்று, இந்த ரோல்ஸ்ராய்ஸில்தான் இயக்குநர் நெல்சன், டான்ஸ் மாஸ்டர் சதீஷ், ஹீரோயின் பூஜா ஹெக்டே, நடிகை அபர்ணா தாஸ் என்று பீஸ்ட் குழுவினரை அந்தக் காரில் ஏற்றி ஒரு ஜாலி ரவுண்ட் வந்தார் விஜய்.

அந்த ரோல்ஸ்ராய்ஸ்தான் இப்போது 2.6 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. இது Negotiable Price தானாம். அது கோஸ்ட் சீரிஸ் 1 மாடல். 2012-ல் ரிஜிஸ்ட்டர் பண்ணப்பட்ட அந்தக் காரின் ஓடோ மீட்டர் ரீடிங் 22,000 கிமீ.
நுழைவு வரி, இறக்குமதி வரி, இடைக்காலத் தடை என்று பல பஞ்சாயத்துகள் போனாலும் – குறிப்பிடப்பட்ட விலையைத் தாண்டி 10 ரூபாய்கூட செலுத்தத் தேவையில்லை என்கிறது ரோல்ஸ்ராய்ஸ் டீலர்ஷிப். அதாவது – Due Tax எதுவும் கட்ட அவசியமில்லை. வெறும் 2.6 கோடி ரூபாய்தான்; அதுக்கு மேல சல்லிக்காசு கொடுக்கத் தேவையில்லையாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *