சென்னை, செப். 28அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று ஆணையர் அலுவலகத்தில், திருநெல்வேலிநெல்லையப்பர் கோயிலுக்கு புதியவெள்ளித்தேர் செய்திட 100 கிலோ வெள்ளிக் கட்டிகளை வழங்கி, வெள்ளித்தகடு வேயும் பணிகளை தொடங்கி வைத்தார்.பின்னர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:–திருநெல்வேலி, நெல்லையப்பர் திருக்கோயிலில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த வெள்ளித்தேர் 1991ஆம் ஆண்டு தீ விபத்தில் எரிந்து விட்டது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு முதலமைச்சர் புதிய வெள்ளித் தேர் உருவாக்குகின்ற பணியை உடனடியாக தொடங்கிடவேண்டும் என்று உத்தரவிட்டதை தொடர்ந்து, சுமார் 33ஆண்டுகளுக்குப் பின் புதிய வெள்ளித்தேர் உருவாக்கிட பணிகள் தொடங்கப்பட்டு மரத்தேர் பணிகள் நிறைவுற்றுள்ளது.இந்த மரத்தேருக்கு வெள்ளி தகடு வேயும் பணிக்கு சுமார் 450 கிலோ அளவிற்கு வெள்ளி தேவைப்படுகின்றது .திருக்கோயிலில் ஒன்பது கிலோ வெள்ளி நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் நன்கொடையாளர்கள் எஸ்.ராஜரத்தினம், ஆர்.சபாபதி ஆகியோர் 100கிலோ வெள்ளிக்கட்டியை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதன் மதிப்பு ஒரு கோடியே 2 லட்சம் ஆகும்.அடுத்தாண்டு ஜுலை மாதத்திற்குள் புதிய வெள்ளித்தேரை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் 68 தங்கத்தேர்களும், 55 வெள்ளித்தேர்களும் உள்ளன. இந்த அரசு பொறுப்பேற்ற பின்ரூ.29 கோடி மதிப்பீட்டில் 5புதிய தங்கத்தேர்களும்,ரூ.27.16 கோடி மதிப்பீட்டில் 9 புதிய வெள்ளித்தேர்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில் பெரியபாளையம் தங்கத்தேர் மற்றும் திருத்தணி வெள்ளித்தேர் பக்தர்கள் பயன்பாட்டிற்குகொண்டு வரப்பட்டுள்ளன.மேலும், 11 ஆண்டுகளாக ஓடாமலிருந்த ராமேசுவரம் தங்கத்தேர், 10 ஆண்டுகளாக ஓடாமலிருந்த சமயபுரம் தங்கத்தேர், 9 ஆண்டுகளாக ஓடாமலிருந்த சேலம் கோட்டை மாரியம்மன் தங்கத்தேர், 5 ஆண்டுகளாக ஓடாமலிருந்த திருத்தணி தங்கத்தேர் போன்றவற்றை ஓட்டி காட்டியுள்ளோம்.150 ஆண்டுகளுக்கு பின் பூவரசங்குப்பம், லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் திருத்தேர், 87 ஆண்டுகளுக்கு பின் சிந்தாதிரிப்பேட்டை ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் திருத்தேர், 80 ஆண்டுகளுக்கு பின் சீட்டணஞ்சேரி,காளீஸ்வரர் திருக்கோயில் திருத்தேர் போன்ற திருத்தேர்கள் ஓட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்து சாதனை படைத்துள்ளோம். மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு விடுமுறை நாட்களில் வாகனங்கள் அதிகளவில் வருவதால் பக்தர்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையிலும் இ-பாஸ் நடைமுறையினை செயல்படுத்துவது குறித்து திருக்கோயில் நிர்வாகம், காவல் துறையினர் அறிவித்துள்ளனர். முழு ஆய்விற்கு பிறகு இ-பாஸ் தேவையில்லை என்று கருதப்பட்டால் அது ரத்து செய்யவும் தயாராக இருக்கிறோம். பக்தர்களின் சிரமத்தை போக்குவதற்காக இத்தகைய திட்டத்தை செயல்படுத்து வதற்கு ஆலோசித்துக்கொண்டிருக்கின்றோம்.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள11 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும் , 7 6 3 திருக்கோயில்களில் ஒரு வேளை அன்னதானமும், 17திருக்கோயில் களில் நாள் முழுவதும் பிரசாதமும் வழங்கப்பட்டு வருகிறது.அன்னதானத் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 92 ஆயிலம் பக்தர்கள் பயன் பெற்று வருகின்றனர். இதற்காக ஆண்டு ஒன்றிற்குரூ.110 கோடி செலவிடப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் டாக்டர். இரா.சுகுமார், ந.திருமகள்,சி.ஹரிப்ரியா, வெள்ளி நன்கொடையாளர் ஆர்.சபாபதி, இணை ஆணையர்கள் பொ.ஜெயராமன், கோ.செ.மங்கையர்க்கரசி, ரா.வான்மதி எம்.அன்பு மணி,துணை ஆணையர் அ.ஜான்சிராணி மற்றும் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
நெல்லையப்பர் கோவில் மரத் தேருக்கு 100 கிலோ வெள்ளிக் கட்டிகள்! அமைச்சர் சேகர்பாபு வழங்கி பணிகளை தொடங்கினார்!!






