போலீசாரின் வாக்கிடாக்கியை ஆற்று பகுதியில் தூக்கி வீசிய போதை ஆசாமி!

புவனகிரி அருகே
போலீசாரின் வாக்கிடாக்கியை ஆற்று பகுதியில் தூக்கி வீசிய போதை ஆசாமி! பல மணி நேரமாக தேடி கண்டு பிடிக்க முடியாமல் திணறல்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஒரத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிளியனூர் கிராம பகுதியில் சிதம்பரம்- சேத்தியாதோப்பு சாலையில் அரசு டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு அருகில் வெள்ளாற்று ஓரமாக உள்ள சிமெண்ட் கட்டையில் இரவு நேரத்தில், சுமார் 11 மணி அளவில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆனந்த் (40), அப்பகுதியைச் சேர்ந்த அபி (27) ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது ரோந்து சென்ற போலீசார் இங்கே உட்கார்ந்து மது அருந்து கூடாது வீட்டிற்கு செல்லுங்கள் என்று கூறினர். இதனால் மது குடித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் போலீசார்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போதை ஆசாமி ஆனந்த் போலீசாரிடம் இருந்த வாக்கிடாக்கியை திடீரென பிடுங்கி தூக்கி வீசி உள்ளார். அப்போது அந்த வாக்கி டாக்கி எந்த பகுதியில் விழுந்தது என்று தெரியவில்லை. ஆனால் முட்புதரில் விழுந்துள்ளது. உடனடியாக போதை ஆசாமியுடன் இருந்த அபியை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பல மணி நேரமாக போதை ஆசாமியால் தூக்கி வீசப்பட்ட வாக்கி டாக்கியை ஆற்றுப்பகுதியில் உள்ள முட்புதரில் தேடி வருகின்றனர். மேலும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை வைத்தும் தேடிப் பார்த்தும் இன்னமும் வாக்கிடாக்கியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைமறைவான போதை ஆசாமி ஆனந்தை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.