தீபாவளி சிறப்பு பேருந்துகள்: உங்கள் ஊருக்கு செல்ல எங்கிருந்து புறப்படுகிறது?

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான அறிவிப்பை போக்குவரத்து கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

வரும் நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு மக்கள் பட்டாசு புத்தாடைகள் வாங்குவது, பலகாரம் செய்வது என கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வேலை அல்லது கல்விக்காக சென்றவர்கள் தங்கள் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாட வருகை தருவார்கள் என்பதால் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது.

வரும் நவம்பர் 5ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சென்னையிலிருந்து இயக்கக் கூடிய 6,573 பேருந்துகளுடன் கூடுதலாக 9,086 சிறப்புப் பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 15,659 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு இயக்கக் கூடிய 4,382 பேருந்துகளுடன் கூடுதலாக 6,815 சிறப்புப் பேருந்துகள் என 2 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 11,197 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

எந்தெந்த இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன?

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம்

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

CMDA காலநிலை பூங்கா அருகில் திறந்தவெளி இடம், கிளாம்பாக்கம். (தற்காலிக பேருந்து நிலையம்)

வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையம் (சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது)

கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு

கிழக்கு கடற்கரை (ECR), காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

மாதவரம் புதிய பேருந்து நிலையம்

பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.