ஊழல் என்பது மனித குலத்துக்கு எதிரான குற்றம் என்று திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் தொடர்பாக இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தரம் உயர்த்துதல், டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி அரசகுமார், முத்துக்குமார் உள்ளிட்டோர் பணம் வசூலித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
முதலில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் அன்பில் மகேஷின் பெயர் இடம்பெறவில்லை. பின்னர் விசாரணையின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவரது பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி வி. லட்சுமிநாராயணன் விசாரித்தார்.
அரசு தரப்பு வாதம் என்ன?
இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், “இதுவரை 177 பள்ளி நிர்வாகங்கள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடக்கத்தில் சில கோடி ரூபாய் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், விசாரணையில் இதுவரை ரூ.400 கோடி வசூலிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அன்பில் மகேஷிடம் நேரடியாகப் பணம் கொடுக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது” என வாதிட்டார்.
அன்பில் மகேஷ் தரப்பு வாதம் என்ன?
அன்பில் மகேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், “செப்டம்பர் 16ஆம் தேதி அன்பில் மகேஷுக்குச் சொந்தமான 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. செப்டம்பர் 18ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு ஆஜரான அன்பில் மகேஷிடம் 8 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் கேட்கப்பட்ட 240 கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். அன்பில் மகேஷ் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வருகிறார். அவர் தலைமறைவாகிவிட வாய்ப்பில்லை. சாட்சிகளைக் கலைக்கவும் மாட்டார்.
இந்த வழக்கில் பெரும்பாலான ஆதாரங்கள் ஆவணங்களாகவே இருப்பதால், அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. முத்துக்குமார், அன்பில் மகேஷின் பள்ளித் தோழர் என்றாலும், இந்த வழக்கில் அவருடன் வேறு எந்தத் தொடர்பும் இல்லை” என்று வாதிட்டார்.
அத்துடன், “ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைதான் விசாரிக்க வேண்டும்; மத்திய குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரிப்பது சரியல்ல” என்றும் பி. வில்சன் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி. லட்சுமிநாராயணன், முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.
இந்த நிலையில், இன்று (அக்டோபர் 26) அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி வி. லட்சுமிநாராயணன் உத்தரவிட்டார்.
நீதிபதி வி. லட்சுமிநாராயணன் தீர்ப்பு என்ன?
அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததற்கான காரணங்களைத் தனது 20 பக்க உத்தரவில் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் விரிவாக விளக்கியுள்ளார்.
நீதிபதி வி. லட்சுமிநாராயணன் தீர்ப்பில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:
லஞ்ச ஒழிப்புத்துறைதான் விசாரிக்க வேண்டுமா?
ஊழல் வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது. ஊழல் வழக்குகளை விசாரிக்கும் தனிப்பட்ட அதிகாரம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மட்டுமே இருப்பதாகக் கூற முடியாது.
இந்த வழக்கு முதலில் தனியார் பள்ளிகள் சங்கம் தொடர்பான புகாரின் அடிப்படையில்தான் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின்போது மற்றவர்களின் தொடர்பு தெரியவந்துள்ளது. அமைச்சர் ஒருவர் தொடர்புடையவராக இருப்பதற்காக மட்டும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை.
ஒரு வழக்கை எந்தப் பிரிவு விசாரிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது காவல்துறையின் அதிகாரத்துக்கு உட்பட்டது. விசாரணை நடத்தும் அதிகாரமே இல்லாத நிலை ஏற்பட்டாலன்றி, எந்தப் பிரிவு விசாரிக்க வேண்டும் என்பதில் நீதிமன்றம் தலையிடாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
(It is not as if the DVAC alone possesses the exclusive jurisdiction to investigate matters relating to corruption. The facts reveal that initially, the complaint arose with respect to Tamil Nadu Private Schools Association. During the course of investigation, the involvement of other accused has come out. For the sake that a Minister is involved, it is not necessary that the CCB should transfer all the files relating to the alleged crime to the DVAC. As to who should investigate is a matter which is exclusively within the jurisdiction of police. Unless and until there is an inherent lack of jurisdiction, this court will not interfere as to who takes up the matter for investigation.)
ஊழல் என்பது மனித குலத்துக்கு எதிரான குற்றம்
முன்ஜாமீன் மனுவை விசாரிக்கும்போது ஊழல் என்பது மிகக் கடுமையான பொருளாதாரக் குற்றம் என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஊழல் என்பது அரசுக் கருவூலத்தை மட்டும் பாதிப்பதில்லை. அது மனித குலத்துக்கு எதிரான குற்றமாகவும் இருக்கிறது. மனித உரிமைகளையும் நேரடியாகப் பாதிக்கிறது.
இதுபோன்ற வழக்குகளில் மனுதாரர் ஏற்கெனவே வகித்த பதவி, அதன் மூலம் அவருக்கு இருக்கும் செல்வாக்கு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசு நிர்வாகத்தில் தலையிடவோ, சாட்சிகளிடம் செல்வாக்குச் செலுத்தவோ அவரால் முடியுமா என்பதையும் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்.
இத்தகைய ஊழல் வழக்குகளில் முன்ஜாமீன் வழங்குவதற்கான அணுகுமுறையும், வழக்கமான ஜாமீன் வழங்குவதற்கான அணுகுமுறையும் அடிப்படையிலேயே வேறுபட்டவை.
(This court, while dealing with an application for anticipatory bail, would have to keep in mind that corruption is a grave economic offence. It not only affects the public exchequer but is also a crime against humanity and directly affects the human rights. In cases such as these, the court has to keep in mind the position that had been occupied by the petitioner and thereby, his ability to tamper with the State machineries or influence witnesses. I should hasten to add that the consideration for anticipatory bail is fundamentally different from grant of bail in such cases.)
ஊழல் வழக்குகளில் முன்ஜாமீன் வழங்கலாமா?
ஊழல் வழக்குகளில் முன்ஜாமீன் வழங்குவது தொடர்பான சட்ட அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்ஜாமீன் வழங்குவதற்கு நீதிமன்றங்களுக்கு விரிவான அதிகாரங்கள் உள்ளன. ஆனால், ஊழல் மற்றும் சமூகப் பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் முன்ஜாமீன் வழங்குவதற்கான விருப்புரிமை குறைந்துள்ளது.
ப. சிதம்பரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்தபடி, இதுபோன்ற வழக்குகளை மற்ற வழக்குகளிலிருந்து வேறுபட்ட தனி வகையாகக் கருத வேண்டும்.
குர்பக்ஷ் சிங் சிப்பியா வழக்கில் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியபடி, பொதுவாக தனிமனிதச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அணுகுமுறையைத்தான் நீதிமன்றங்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், அரசியல்வாதி போன்ற செல்வாக்குமிக்க நபர்கள் தொடர்புடைய வழக்குகளில் அனில் சர்மா வழக்கில் உச்சநீதிமன்றம் வகுத்த நெறிமுறைகள் பொருந்தும்.
ஏனெனில், தனிமனித சுதந்திரத்துடன் ஒப்பிடும்போது, ஆழமான சதியை வெளிக்கொண்டுவர வேண்டிய பொதுநலனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
(Analysis of the law on the point shows that there has been a tectonic jurisprudential shift in the law relating to anticipatory bail in matters relating to corruption. While the power to grant anticipatory bail is wide and expansive, the scope of discretion to grant it has reduced when applications are filed in matters relating to corruption or socio-economic offences. A careful analysis of the aforesaid judgments shows that such cases are to be treated as a “class apart”, as held in P.Chidambaram’s case. While the pro-liberty view taken in Gurbaksh Singh Sibbia’s case is to be applied in general, when an influential person like a politician is involved, the principles laid down in Anil Sharma’s case and reiterated by the Supreme Court over a period of two decades and a half comes into operation. It is because public interest demands unearthing a deep conspiracy when pitted against individual liberty.)
அன்பில் மகேஷுக்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்தது எப்படி?
இந்த வழக்கில் அன்பில் மகேஷுக்குத் தொடர்பு இருப்பதாக ஆரம்பத்திலேயே காவல்துறைக்குத் தகவல் கிடைக்கவில்லை. விசாரணை நடத்தியபோதுதான் அவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இதுபோன்ற வழக்குகளில் பல்வேறு வங்கிக் கணக்குகளையும் பணப் பரிமாற்றங்களையும் காவல்துறையினர் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல அடுக்குகளைக் கொண்ட ஊழல் முறைகேடுகள், ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள், சதியில் பல்வேறு நபர்களின் தொடர்பு ஆகியவற்றை விசாரிக்க வேண்டிய சூழலில் முன்ஜாமீன் வழங்குவது விசாரணையின் போக்கையே பாதித்துவிடும்.
(It is not as if the police had been informed about the involvement of the petitioner at the initial stage itself. It was during the course of investigation that they stumbled across materials, which revealed to them the alleged involvement of the accused. Such kind of cases will require the police to check multiple accounts and money trails. Therefore, in cases of multi-layered corruption, involving manipulation of records, which has several players involved in a conspiracy, granting anticipatory bail will thwart the course of investigation.)
முத்துக்குமாரை அன்பில் மகேஷ் பாதுகாத்தாரா?
இந்த வழக்கில் அன்பில் மகேஷ் வெளியே இருந்தால் சாட்சிகளைக் கலைக்கவும், விசாரணைக்குத் தடையாக இருக்கவும், ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்பிருப்பதாகக் கடுமையான அச்சம் எழுந்துள்ளது.
மேலும், தலைமறைவாக உள்ள A-2 முத்துக்குமாரை அன்பில் மகேஷ் பாதுகாத்திருப்பதாக முதல்கட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
(When a strong apprehension arises that the petitioner will use the liberty to influence witnesses, hamper investigation or destroy physical evidences, it operates as general exception for the rule set forth above. Prima facie, the records reveal that the absconding accused – A2 has been shielded by the petitioner.)
முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை முடங்கும்
இந்த வழக்கில் அன்பில் மகேஷுக்கு முன்ஜாமீன் வழங்கினால் விசாரணையே முடங்கிவிடும். தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. அதே நேரத்தில் ஊழலற்ற அரசு நிர்வாகம் வேண்டும் என்ற சமூகத்தின் தேவையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இதுவரை பாதிக்கப்பட்ட 177 பேர் முன்வந்து வாக்குமூலம் அளித்துள்ளனர். அன்பில் மகேஷ் அரசியலில் உயர்ந்த பதவியில் இருப்பவர். A-2 (முத்துக்குமார்) கைது செய்யப்படுவதற்கு முன்பே அன்பில் மகேஷுக்கு முன்ஜாமீன் வழங்கினால், அது தலைமறைவாக உள்ள நபர் விசாரணையிலிருந்து தப்பிக்க உதவுவதாக அமைந்துவிடும்.
(This court is of the view that if anticipatory bail is granted in this case, it would paralyse the investigation. While protection of individual liberty is a duty of the court, it should be weighed against the society’s need for a corruption free governmental administration. The records show that 177 victims have so far come forward to record their statements. The petitioner is a politician, holding a high position. If anticipatory bail is granted before the second accused is apprehended, then it would become a tool for the second accused to avoid the process of the investigation.)
‘பார்ட்டி பண்ட்’ யாருக்கு போனது?
இந்த வழக்கில் அனைத்து ஆதாரங்களும் ஆவணங்களாக இருப்பதால் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. பணப் பரிமாற்றங்கள் தொடர்பான வழக்குகளில் பணம் வசூலிக்கப்பட்டதன் நோக்கம் என்ன, பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் யார், இறுதியாக அந்தப் பணம் யாரிடம் சென்றது என்பதைக் கண்டறிய காவலில் எடுத்து விசாரிப்பது அவசியமாகிறது.
(The plea of Mr.P.Wilson that all the evidences are documentary in nature and therefore, custody is unnecessary had also been considered by the courts and rejected. Money trails would still require custodial interrogation in order to establish the intent and identify who had been holding the strings and the final destination of the amount alleged to be involved.)
அன்பில் மகேஷ் ஏற்கெனவே காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைத்திருக்கிறார். அவரிடம் கேட்கப்பட்ட 240 கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். இருப்பினும், விசாரணைக்கு ஒத்துழைத்திருப்பதை மட்டும் காரணமாகக் கொண்டு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
கட்சி நிதி (Party Fund) என்ற பெயரில் பணம் பெற்றதாக அன்பில் மகேஷ் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்தக் கட்சி நிதி இறுதியாக யாருக்குச் சென்றது என்பதை அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்காமல் கண்டறிய முடியாது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
(The fact that the petitioner herein had co-operated with the interrogation so far is no ground to grant anticipatory bail as he faces accusation of having received monies under the name and style ‘party fund’. As to who is the final destination of this alleged “party fund” cannot be unearthed unless and until the petitioner is interrogated.)
விசாரணை இன்னும் ஆரம்பகட்டத்திலேயே உள்ளது. புதிய தகவல்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே, இந்த நிலையில் அன்பில் மகேஷுக்கு முன்ஜாமீன் வழங்குவது பொருத்தமானதாக இருக்காது என்று கூறி அவரது மனுவை நீதிபதி வி. லட்சுமிநாராயணன் தள்ளுபடி செய்தார்.






