சுள்ளான் மதன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது!

சிவகங்கை மதன் கொலை வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்குச் சென்ற சுள்ளான் என்ற  மதன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில்  முதலில் 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணிகள் நடந்து வந்தது.

இந்தநிலையில் மதன் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக சிவகங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை இன்று (அக்டோபர் 21) வெளியிட்ட அறிவிப்பில், ’சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலமங்கலத்தில், கடந்த 18.10.2026 அன்று மதியம் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான மதன் @ சுள்ளான் மதன் (26), த/பெ. சக்தி, புதுப்பட்டி, சிவகங்கை என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிவகங்கை நகர் காவல் நிலைய குற்ற எண். 575/2026, பிரிவுகள் 191(2), 191(3), 103(1) BNS-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வழக்கில் நேற்று 3 எதிரிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று மேலும் 4 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று கைது செய்யப்பட்ட எதிரிகள் விவரம்:
1. சந்தோஷ் (19), த/பெ. குமார், சிவகங்கை.
2. ஜெய மாணிக்கராஜ் (20), த/பெ. கருப்பசாமி, சிவகங்கை.
3. முத்து சூர்யா (20), த/பெ. மாணிக்கம், சிவகங்கை.
4. விக்னேஷ் (23), த/பெ. பெரியசாமி, மதுரை.

கைது செய்யப்பட்ட மேற்கண்ட 4 எதிரிகளும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற எதிரிகளைக் கைது செய்வதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடப்பட்டு வருகின்றனர்.

அவர்களையும் விரைவில் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இக்கொலை வழக்கு தொடர்பாக இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் சமூக நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கருத்துகள் மற்றும் புகைப்படங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் வகையில், சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் பதிவுகள் வெளியிடுவோர் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்வதுடன், கடுமையான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.