தூத்துக்குடி,: தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதி அருகே கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக நடுக்கடல் பகுதியில் பைப் லைன் அமைப்பதற்காக சிறிய ரக கப்பல் மூலம் நடுக்கடலில் மணலை தோண்டி ஆழப்படுத்தும் பணி துவங்கி நடந்து வருகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தூத்துக்குடி நாட்டுப்படகு மீனவர் சங்கம் சார்பில் 40க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். மேலும் அவர்கள் அங்கு அந்த சிறிய கப்பலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக இந்தப் பகுதியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வருவதை நிறுத்த வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோசங்களை எழுப்பினர். துறைமுக அதிகாரிகள் மீனவர்களுடன், பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அதிகாரிகள் தற்காலிகமாக வேலையை நிறுத்தி விட்டு, சென்றனர். இதனை தொடர்ந்து குழாய் பதிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மீனவர்களும் போராட்டத்தை கைவிட்டு திரும்பினர்.
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் சிறிய ரக கப்பலை மீனவர்கள் முற்றுகை






