மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2 தொகுதிகளிலும் தவெக வெற்றி: திமுகவுக்கு 2வது இடம்; 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது அதிமுக: டெபாசிட் இழந்த நாதக, கம்யூனிஸ்ட் கட்சிகள்

சென்னை: தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதியிலும் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்த இரண்டு தொகுதியிலும் திமுக 2வது இடம் பிடித்தது. அதிமுகவுக்கு 3வது இடமே கிடைத்தது. கடந்த முறை திமுக கூட்டணியில் நின்று, பின்னர் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்து, தற்போது தேர்தலில் தனித்து நின்ற இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் மிக குறைந்த வாக்குகள் பெற்றதுடன், டெபாசிட்டையும் இழந்தன. நாம் தமிழர் கட்சியும் டெபாசிட்டை இழந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோன்று தாராபுரம் ெதாகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றார். இந்நிலையில் தவெக 108 இடங்களை பிடித்து திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆனாலும், தவெக தனிப்பெரும்பான்மை பெறாததால், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்எல்ஏக்களை குதிரை பேரம் மூலம் வாங்க தொடங்கியது.

இதை தொடர்ந்து, அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்தனர். இதேபோல் பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் 7 தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் கடந்த 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

நீதிமன்ற வழக்கு காரணமாக மற்ற 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை. தாராபுரத்தில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 214 வாக்குகள் பதிவாகின. அதாவது 80.25 சதவீத வாக்குகள் பதிவாகின. மதுராந்தகத்தில் 1,84,423 வாக்குகள் பதிவாகின. இது 86.26 சதவீதம் ஆகும். மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சுகந்தி மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 27 பேர் களம் இறங்கினர்.

இதேபோல் தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா (தவெக), சுகன்யா (திமுக), பானுமதி (அதிமுக), கார்த்திகா (நாம் தமிழர்), லட்சுமணன் (இ.கம்யூனிஸ்ட்) மற்றும் சுயேச்சைகள் உள்பட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை 9ம் தேதி (நேற்று) காலை நடந்தது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது.

மதுராந்தகம் தொகுதியில் 14 மேஜைகள் போடப்பட்டு 21 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடந்தது. தாராபுரம் தொகுதியில் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. தாராபுரம் தொகுதியில் தபால் வாக்குகளில் திமுக அதிக வாக்குகள் பெற்றிருந்தது. மதுராந்தகம் தொகுதியில் தவெக அதிக தபால் வாக்குகளை பெற்றது. மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், மதுராந்தகம் தொகுதியில் முதல் சுற்றில் இருந்தே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னணியில் இருந்தார்.

2வது இடத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனும், 3வது இடத்தில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தும் இருந்தனர். அதன்படி முதல் சுற்றில் தவெக – 4906, திமுக – 3514, அதிமுக – 2818 வாக்குகள் பெற்றிருந்தனர். தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் முதல் சுற்றில் 5 வாக்குகள் அதிகமாக பெற்று முதல் இடத்தில் இருந்தார். அதன்படி, பானுமதி (அதிமுக) – 2639, சத்தியபாமா (தவெக) – 2634, சுகன்யா (திமுக) – 2019 ஓட்டுகள் பெற்றிருந்தனர். தாராபுரம் தொகுதியில் முதல் 4 சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் பானுமதியே முன்னிலையில் இருந்தார்.

4வது சுற்று முடிவுபடி தாராபுரத்தில் பானுமதி (அதிமுக) – 10,773, சத்தியபாமா (தவெக) – 9815, சுகன்யா (திமுக) – 8906, கார்த்திகா (நாதக) – 693, லட்சுமணன் (இந்திய கம்யூ.) – 187 ஓட்டுகள் பெற்றிருந்தனர். மதுராந்தகத்தில் முதல் சுற்றில் இருந்து தொடர்ந்து 21வது இறுதி சுற்று வரை தவெக முன்னிலையிலேயே இருந்தது. மதுராந்தகத்தில் 4வது சுற்றில் தவெக – 15,509, திமுக – 11,187, அதிமுக – 9691 வாக்குகள் பெற்றிருந்தனர். தாராபுரத்தில் 4வது சுற்றில் தவெக – 9,815, அதிமுக – 10,773, திமுக – 8,906, நாதக – 693, இந்திய கம்யூ. – 187 வாக்குகள் பெற்றன.

அதன்படி 4வது சுற்று வரை அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலையில் இருந்தார். தொடர் ந்து, 5வது சுற்றில் இருந்து 23வது சுற்று வரை தாராபுரம் தொகுதியிலும் தவெக வேட்பாளர் சத்தியபாமா அதிக வாக்குகளை பெற்று முன்னிலை வகித்தார். அதேபோன்று, தாராபுரத்தில் 11வது சுற்று முடிவில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 31,327 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். 2வது இடத்தில் இருந்த அதிமுக வேட்பாளரை பின்னுக்கு தள்ளி திமுக வேட்பாளர் சுகன்யா 25,841 வாக்குகள் பெற்று 2வது இடத்துக்கு முன்னேறினார்.

அதிமுக – 24,363, நாதக – 2499, இந்திய கம்யூ. – 578 வாக்குகள் பெற்றிருந்தனர். தொடர்ந்து இறுதி சுற்று வரை திமுக வேட்பாளர் 2வது இடத்திலேயே நீடித்தார். மதுராந்தகம் தொகுதியில் இறுதியாக 21 சுற்றுகள் முடிந்த நிலையில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 72,354 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். வாக்கு வித்தியாசம் 20,008 ஆக இருந்தது. 2வது இடத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமன் – 52,346 வாக்குகள், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் – 45,743 வாக்குகள், நாதக வேட்பாளர் ஜானகிராமன் – 2,643, மார்க்சிஸ்ட் வேட்பாளர் சுகந்தி – 1,946 வாக்குகள் பெற்றிருந்தனர்.

அதேபோன்று தாராபுரம் தொகுதியில் இறுதியாக 23 சுற்றுகள் முடிந்த நிலையில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 66,841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். வாக்கு வித்தியாசம் 9,471 ஆகும். 2வது இடத்தில் திமுக வேட்பாளர் சுகன்யா – 57,370 வாக்குகள், அதிமுக வேட்பாளர் பானுமதி – 45,280 வாக்குகள், நாதக வேட்பாளர் கார்த்திகா – 5,268 வாக்குகள், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணன் – 1,157 வாக்குகள் பெற்றிருந்தனர்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதியிலும் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி மிகவும் குறைந்த வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்துள்ளது. கடந்த முறை திமுக கூட்டணியில் நின்று, பின்னர் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்து, தற்போது இந்த தேர்தலில் தனித்து நின்ற இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் 2 ஆயிரத்துக்கும் குறைந்த வாக்குகள் பெற்றதுடன், டெபாசிட்டையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.

* வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு: சுயேச்சை வேட்பாளர் குற்றச்சாட்டு

மதுராந்தகம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் மூர்த்தி, கேமரா சின்னத்தில் போட்டியிடுகிறார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்தபோது, திடீரென ஒரு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அந்த சுற்றின் வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்காமல் அடுத்த சுற்றுக்கு அதிகாரிகள் சென்றனர். இதனால் ஆவேசமடைந்த சுயேச்சை வேட்பாளர் மூர்த்தி, ‘முதல் சுற்று வாக்குகளின் முடிவுகளை அறிவித்து விட்டுதான் அடுத்த சுற்றுக்கு செல்ல வேண்டும்’ என்றார்.

அதற்கு அதிகாரிகள், ‘அப்படி எதுவும் செய்ய முடியாது, அதை கடைசியில் பார்க்கலாம்’ என கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து அவர், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும்படி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு டிஎஸ்பி வீரகுமார், இன்ஸ்பெக்டர் மருதப்பன் தலைமையிலான போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து, அவரை வெளியே அழைத்து வந்தனர்.

பின்னர், அங்கிருந்த நிருபர்களிடம், ‘வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடக்கிறது. ஒரு வேட்பாளரான என்னை எப்படி வெளியே அனுப்பலாம். தேர்தல் கமிஷன் தலையிட வேண்டும்’ என்று மூர்த்தி கூறினார். பின்னர், மாவட்ட எஸ்பியுடன் வாக்குவாதம் செய்தார். அதற்கு அவர், ‘தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டு கொள்ளுங்கள்’ என்றார். இதனால் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் செய்திகள்

* தபால் வாக்குகளை அள்ளிய திமுக தவெக 3ம் இடம்

தாராபுரம் இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் மொத்தம் 1,331 பதிவானது. இதில், தவெக வேட்பாளர் சத்தியபாமா 255, திமுக வேட்பாளர் சுகன்யா 613, அதிமுக வேட்பாளர் 406, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 19, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் 7 வாக்குகள் பெற்றனர். இதில் 15 வாக்குகள் செல்லாதவை.

* தாராபுரத்தில் 19 பேர் டெபாசிட் இழப்பு

இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கனசங்கம் கட்சி, ஆன்ட்டி கரப்சன் டைனமிக் பார்ட்டி, அனைத்து இந்திய அண்ணா திராவிட மக்கள் செயல் கட்சி, 14 சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 19 பேர் டெபாசிட் இழந்தனர்.

* மே மாதம் தேர்தலில் வாக்குகள் விவரம்

தாராபுரம் (தனி)

சத்தியபாமா (அதிமுக) 81,100

இந்திய நிகழ்வுகள்

இந்திராணி (திமுக) 64,373

கவுரி சித்ரா (தவெக) 46,438

திவ்யா (நாதக) 6,026

நோட்டா 1,058

அதிமுக 16,727 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* மதுராந்தகம் (தனி)

மரகதம் குமரவேல் (அதிமுக) 69,284

எழில் கேத்தரின் (தவெக) 62,090

அமுலு பொன்மலர் (திமுக) 59,838

ஜானகிராமன் (நாதக) 4,950

நோட்டா 797

அரசியல் செய்திகள்

அதிமுக 7,194 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் என்ஆர் காங்கிரஸ் வெற்றி

புதுச்சேரி பொதுதேர்தலில் தட்டாஞ்சாவடி, மங்கலம் என 2 தொகுதிகளில் முதல்வர் ரங்கசாமி வெற்றி பெற்றார். இதில் அவர் ராஜினாமா செய்த தட்டாஞ்சாவடி தொகுதிக்கு கடந்த 6ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. என்ஆர் காங்., சார்பில் அசோக் ஆனந்தன், திமுக சார்பில் சேதுசெல்வம், காங்., சார்பில் விநாயகம், இந்திய கம்யூ., சார்பில் சலீம், நாதக சார்பில் கார்த்திக்குமாரி உள்பட 11 பேர் போட்டியிட்டனர். இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது.

இதில் என்ஆர் காங்., -13,358, காங்.,-4,876, திமுக-2,664, இந்திய கம்யூ.,-310, நாதக-172 வாக்குகள் பெற்றனர். இதன்மூலம் என்ஆர் காங்., வேட்பாளர் அசோக் ஆனந்தன் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் சட்டசபையில் என்ஆர் காங்., பலம் மீண்டும் 12 ஆக உயர்ந்துள்ளது. போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்தை தவிர்த்து மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர். அதேபோல், நாதக வேட்பாளர் கார்த்திக்குமாரி நோட்டாவைவிட 53 வாக்குகள் குறைவாக பெற்றது குறிப்பிடத்தக்கது.