சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வுபெற்ற அனைவருக்கும் உரிமை ஓய்வூதியம் வழங்க வேண்டும்!

தமிழக அரசுக்கு அரசு கல்லூரி பங்களிப்புத் திட்ட ஓய்வூதியர்கள் கோரிக்கை

திருச்சி, அக். 3:

சிபிஎஸ் எனப்படும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வுபெற்ற அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசு கல்லூரி பங்களிப்புத் திட்ட ஓய்வூதியர் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி ஜங்சன் பகுதியில் தமிழக அரசு கல்லூரி பங்களிப்புத் திட்ட ஓய்வூதியர் நலச் சங்கத்தின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஜோசப் ஜான் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் தலைமை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய ராஜராஜேஸ்வரன், மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், சிபிஎஸ் திட்டத்தின் கீழ் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களின் எதிர்கால வாழ்வாதாரம் மற்றும் ஓய்வுக்கால பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, எந்தவிதமான மாதாந்திர ஓய்வூதியப் பலன்களையும் பெறாமல் சிபிஎஸ் திட்டத்தின் கீழ் பணிநிறைவு செய்துள்ள தகுதியுடைய அனைவரும் TAPS திட்டத்தைத் தேர்வு செய்து பயன்பெறும் வகையில் தமிழக அரசு ஏற்கனவே பிறப்பித்துள்ள அரசாணையில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், TAPS திட்டத்தைத் தேர்வு செய்யாதவர்கள் மற்றும் குறைந்த பணிக்காலத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரின் வயது முதிர்வைக் கருத்தில் கொண்டு, அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உரிய சமூகப் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அதன்படி, அவர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய உரிமை ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஓய்வுபெற்ற பிறகும் போதிய மாதாந்திர வருவாய் இல்லாமல் வாழ்வாதாரச் சிரமங்களை எதிர்கொள்ளும் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உரிய ஓய்வூதியப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பதே சங்கத்தின் முக்கிய கோரிக்கையாக கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

கூட்டத்தில் சங்கச் செயலாளர் ரவி, பொருளாளர் கோபண்ணசாமி, டாக்டர் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.