சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பதவிக்காலம் முடிந்த 93 மாவட்ட செயலாளர்களுக்கு பதிலாக, புதிய மாவட்ட செயலாளர்களை உட்கட்சித் தேர்தல் மூலம் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசிக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு ரீதியான கட்டமைப்பை கடந்த 2025 ஜூலை மாதத்தில் தொடங்கி, 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஏற்கனவே 2023ல் நியமிக்கப்பட்ட 144 மாவட்டச் செயலாளர்களில் 93 பேர் தவிர, புதியதாக 141 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், 93 மாவட்டச் செயலாளர்களின் 3 ஆண்டு பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, அந்த 93 மாவட்டச் செயலாளர்களுக்கு பதிலாக புதிய மாவட்டச் செயலாளர்களை உயர்நிலைக்குழுவின் முடிவின்படி உட்கட்சித் தேர்தல் மூலம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான தேர்தல் பணிகளை தேர்தல் பணிக்குழு மேற்கொண்டு வருகிறது. வேட்புமனு தாக்கல் நாள், தேர்தல் நடைபெறும் நாள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்காளர்களுக்கான நடைமுறைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கான உரிய வரையறைகள் உயர்நிலைக்குழுவால் தீர்மானிக்கப்பட்டு, பின்னர் தேர்தல் பணிக்குழுவால் அறிவிக்கப்படும்.
தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளின் பட்டியலும் வெளியிடப்படும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வரலாற்றில் முதன்முறையாக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகளுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






