சேரன்மகாதேவியில் பரிதாபம்: சாலையின் குறுக்கே பாய்ந்த மிளா – பைக்கில் சென்ற சமையல் தொழிலாளி பலி; ஒருவர் படுகாயம்
சேரன்மகாதேவி:
சேரன்மகாதேவியில் வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் சாலையில் சுற்றித்திரியும் மிளாக்களால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு ரவுண்டானா கீழ்ப்புறம் லக்கி பேக்கரி அருகே சாலையின் குறுக்கே திடீரென மிளா பாய்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் பைக்கில் சென்ற சமையல் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவருடன் சென்ற மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேரன்மகாதேவி மேலவடக்கு தெருவைச் சேர்ந்த மாரிகுட்டி (49) என்பவர் சமையல் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு தனது பைக்கில் விக்னேஷ் என்பவருடன் சேர்ந்து சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது சேரன்மகாதேவி ரவுண்டானா கீழ்ப்புறம், லக்கி பேக்கரி அருகே பைக் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்திலிருந்து மிளா ஒன்று திடீரென சாலையின் குறுக்கே பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் பைக் மிளா மீது மோதியதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
இந்த விபத்தில் மாரிகுட்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற விக்னேஷ் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிகாரிகளின் அலட்சியமே காரணமா?
சேரன்மகாதேவி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் மிளா உள்ளிட்ட வனவிலங்குகள் சாலைகளை கடந்து செல்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சாலையின் குறுக்கே வனவிலங்குகள் திடீரென வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வனவிலங்குகள் சாலைக்கு வருவதைத் தடுக்கும் வகையிலும், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையிலும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிளா சாலையின் குறுக்கே பாய்ந்த விபத்தில் ஒரு உயிர் பறிபோன நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






