திருநெல்வேலி, செப். 5:
திருநெல்வேலி மாநகராட்சி 8-வது வார்டு, பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் இந்து ஆதிதிராவிடர் பறையர் சமுதாயத்தினருக்கு சொந்தமான கல்லறை அமைந்துள்ளது. இந்த கல்லறை வளாகம் அருகே பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக பெரிய குழாய்கள் இறக்கி வைக்கப்பட்டபோது, கல்லறையின் காம்பவுண்ட் சுவரின் கீழ்ப்பகுதி சேதமடைந்து இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கல்லறை காம்பவுண்ட் சுவரை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என சமாதானபுரம் பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. பணியில் இருந்த ஊழியர்கள் விரைவில் சுவர் கட்டித் தருவதாக உறுதியளித்ததாகவும், பின்னர் காலதாமதம் ஏற்பட்டதால் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரின் உதவியாளர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதாள சாக்கடை பணிக்குப் பொறுப்பான பட்டேல் லெட்சுமணனிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சுவர் கட்டித் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், உடனடியாக பணியை மேற்கொள்வதாக அவர் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், பின்னர் சுவர் கட்டும் பணி தாமதமானதால் அதிருப்தி ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சமாதானபுரம் பகுதி மக்கள் மற்றும் வார்டு கழக திமுகவினர் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் K.R. ராஜு உடனடி நடவடிக்கை எடுத்ததாகவும், இதன் பயனாக இடிந்து விழுந்த கல்லறை காம்பவுண்ட் சுவரை மீண்டும் கட்டும் பணி செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக துணை மேயர் K.R. ராஜுவுக்கு 8-வது வார்டு பொதுமக்கள் மற்றும் வார்டு கழக திமுகவினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களின் கோரிக்கையை பரிசீலித்து கல்லறை காம்பவுண்ட் சுவர் கட்டும் பணி விரைவாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய பாளையங்கோட்டை மண்டல நகர்ப்புற உதவி பொறியாளர் தங்கபாண்டியன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், பாதாள சாக்கடை பணிக்கான இன்சார்ஜ் மேலாளர் பட்டேல் லெட்சுமணன் தலைமையில் தற்போது காம்பவுண்ட் சுவர் கட்டுமானப் பணி நடைபெற்று வருவதற்கும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
காம்பவுண்ட் சுவர் கட்டும்போது உரிய முறையில் பில்லர் அமைத்து, தரமான முறையில் முழுமையாக கட்டித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமாதானபுரம் பகுதி மக்களின் சார்பில் டாக்டர் ரா. ஞானசோமராஜ், 8-வது வார்டு பாக முகவர் மற்றும் முன்னாள் மாவட்ட கழக திமுக பிரதிநிதி, நன்றி தெரிவித்துள்ளார்.






