கல்லிடைக்குறிச்சி புனித அந்தோணியார் திருத்தல திருவிழா தொடக்கம்

கல்லிடைக்குறிச்சி புனித அந்தோணியார் திருத்தல திருவிழா தொடக்கம்

13 நாட்கள் நடைபெறும் விழா – தினமும் நவநாள் திருப்பலி, நற்கருணை ஆராதனை

கல்லிடைக்குறிச்சி, செப். 5:
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கல்லிடைக்குறிச்சி புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.

திருவிழாவையொட்டி புனித அந்தோணியார் திருத்தலத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்குத்தந்தை அருள் அந்தோணி, பங்கு பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இந்த திருவிழா தொடர்ந்து 13 தினங்கள் நடைபெற உள்ளது. விழாவின் ஒவ்வொரு நாளும் இரவு நவநாள் திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை உள்ளிட்ட சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் கல்லிடைக்குறிச்சி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டு, புனித அந்தோணியாரிடம் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டி பிரார்த்தனை செய்வார்கள்.

கோடி அற்புதர் என பக்தர்களால் போற்றப்படும் புனித அந்தோணியாரிடம் தங்களது குடும்ப நலன், உடல் நலம், தொழில் மற்றும் வாழ்வில் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட உள்ளனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 15-ம் தேதி திருத்தல திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதையொட்டி சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருள் அந்தோணி, பங்கு பேரவை உறுப்பினர்கள் மற்றும் இறைமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் இத்திருவிழாவில் இந்த ஆண்டும் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.