கைலாசா தலைவர் நித்தியானந்தா புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதாகக் கூறப்படும் தகவலைத் தொடர்ந்து, அவரது சீடர்கள் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமியிடம் பாதுகாப்புக் கோரி மனு அளித்துள்ளனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்தியானந்தா கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் அமைத்து பிரபலமடைந்தார். பின்னர், ஈக்வடார் அருகே உள்ள ஒரு சிறிய தீவை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என்ற தனி நாட்டை உருவாக்கியதாகத் தெரிவித்து, அதற்கென தனிக்கொடி, அமைச்சரவை, இணையதளம் மற்றும் ரிசர்வ் வங்கி போன்றவற்றை அறிவித்தார். எனினும், அவருக்கு அடைக்கலம் தரப்படவில்லை என்று ஈக்வடார் தூதரகம் அப்போது விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள கைலாச வித்யாலயா பீடத்தின் கும்பாபிஷேக விழா விரைவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நித்தியானந்தா புதுச்சேரிக்கு வரவுள்ளதாகவும், மத்திய அரசிடம் அனுமதி பெற்று அவருக்குப் பாதுகாப்பு வழங்குமாறும் சீடர்கள் முதலமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கைலாசாவிற்கும் புதுச்சேரி அரசுக்கும் இடையேயான நட்புறவை மேம்படுத்துவது குறித்தும், ஆன்மீக மற்றும் சமூக நலச் செயல்பாடுகளில் எதிர்காலத்தில் இணைந்து செயல்படுவது குறித்தும் சீடர்கள் தரப்பில் கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கும்பாபிஷேக விழாவில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டதோடு, கைலாசாவின் ஆன்மீகப் பணிகள் குறித்த புத்தகமும் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது.
நித்தியானந்தா புதுச்சேரிக்கு வருவதாக செய்திகள் பரவி வரும் நிலையில் நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.






