பெரம்பலூர்,செப்.3: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் சாலை விபத்தில் சிக்கி, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூளைச்சாவு அடைந்தார். அவரது இதயம், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் தோள் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இருதயவியல் துறையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 43 வயது பயனாளிக்கு இதயம் பொருத்தமாக இருந்த நிலையில், உயிரைக் காக்கும் அந்த இதயம் மதுரையிலிருந்து சுமார் 178 கி.மீ. தொலைவில் உள்ள பெரம்பலூர், சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
காலை 10:28 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்ட இதயம், 1 மணி நேரம் 54 நிமிடங்களில், மதியம் 12:22 மணிக்கு சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சென்றடைந்தது. மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி, இந்த அவசரகால உறுப்பு மாற்றுப் பயணம் தடையின்றி நடைபெற, மதுரை – திருச்சி – பெரம்பலூர் வழித்தடத்தில் திருச்சி காவல்துறையினர் போக்குவரத்தைச் சீரமைத்து, பசுமை வழித்தடத்தை (Green Corridor) ஏற்படுத்தினர். இதன் மூலம் குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட இதயம், இருதய மற்றும் மார்பு ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் ஆஷிக் நிஹ்மத்துல்லா தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இதய மாற்று அறுவைச் சிகிச்சையில், இதய மற்றும் நரம்பியல் மயக்கவியல் நிபுணர் மற்றும் இதய மயக்கவியல் ஆலோசகர் டாக்டர் துரையரசு, இதய மற்றும் மார்பக அறுவைச் சிகிச்சை ஆலோசகர் டாக்டர் எஸ்.ப்ரீத்தி நந்தினி, மயக்கவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் ஷமீம் அகமது, இதய மற்றும் மார்பக அறுவைச் சிகிச்சை ஆலோசகர் டாக்டர். செந்தில்.
மேலும், இதய அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், இதய நோய் மருத்துவர்கள், இதய மயக்கவியல் நிபுணர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள், மாற்று உறுப்பு மருத்துவ நிபுணர்கள், பெர்ஃப்யூஷனிஸ்ட்கள், மாற்று உறுப்பு ஒருங்கிணைப்பாளர்கள், செவிலியர்கள் மற்றும் பல்வேறு மருத்துவப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இந்த உயிர்காக்கும் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
இதய மாற்று அறுவைச் சிகிச்சை என்பது சாதாரண இதய அறுவைச் சிகிச்சையை விட பல மடங்கு சிக்கலான மருத்துவச் செயல்முறையாகும். இத்தகைய சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ள 24 மணி நேர இதய அவசர சிகிச்சை வசதி, நவீன கார்டியாக் ஆப்பரேஷன் தியேட்டர்கள், ஹார்ட்-லங் மெஷின் (Heart-Lung Machine), ECMO போன்ற உயிர்காக்கும் ஆதரவு அமைப்புகள், அதிநவீன கார்டியாக் ICU, உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பு மையம், மேம்பட்ட ஆய்வகங்கள், இரத்த வங்கி, உயர்தர இமேஜிங் வசதிகள் மற்றும் அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய தொடர்ச்சியான கண்காணிப்பு அமைப்புகள் ஆகியவை முழுமையாக இருக்க வேண்டியது அவசியம்.
மேலும், உறுப்பு தானம் தொடர்பான நேர மேலாண்மை, தான இதயத்தை பாதுகாப்பாக கொண்டு வருதல், பெறுநரின் துல்லியமான மருத்துவ மதிப்பீடு, அறுவைச் சிகிச்சையின் துல்லியமான செயல்பாடு மற்றும் அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய நோய் எதிர்ப்பு மருந்து மேலாண்மை உள்ளிட்ட ஒவ்வொரு கட்டத்திலும் சர்வதேச தரநிலைகளைப் பின்பற்றும் திறன் கொண்ட மருத்துவக் குழுவே இத்தகைய வெற்றியை உருவாக்க முடியும்.
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பிலும், இதயத்தைப் பெற்ற பயனாளியின் குடும்பத்தினர் சார்பிலும், உயிரைக் காக்கும் இந்த அவசரகால பயணம் தடையின்றி நடைபெற, முழுமையான ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் வழங்கிய திருச்சி மண்டல காவல்ததுறையினரின் அர்ப்பணிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் தன்னலமற்ற சேவைக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
இந்த வரலாற்றுச் சாதனையை முன்னிட்டு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிறுவனர் தலைவர், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் நீவாணி கதிரவன் மற்றும் நகுலன் ஆகியோர் தலைமை இதய மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆஷிக் நிஹ்மத்துல்லா தலைமையிலான முழு இதய மாற்று மருத்துவக் குழுவினரின் அர்ப்பணிப்பு, மருத்துவத் திறன், துல்லியமான திட்டமிடல், நேர்த்தியான செயல்பாடு மற்றும் நோயாளி மையப்படுத்திய சேவையை மனதாரப் பாராட்டி, அவர்களுக்கு தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.






