நெல்லை மாவட்டம் காவல்கிணறு புண்ணியவாளன்புரத்தில் ஆரோக்கிய மாதா45-வது ஆண்டு பெருவிழா

தென்தமிழக வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலத்தின் 45-வது ஆண்டு பெருவிழா கோலாகல துவக்கம்

பணகுடி, ஆக.30:

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு புண்ணியவாளன்புரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தென்தமிழக புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா உயர் திருத்தலத்தின் 45-வது ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

இதையொட்டி திருத்தல வளாகம் முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவின் தொடக்க நிகழ்வாக திருத்தலத்தில் அமைந்துள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி முழக்கங்களை எழுப்பினர்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து திருத்தல தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் திரளான கிறிஸ்தவ மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அன்னை ஆரோக்கிய மாதாவின் அருளையும் ஆசியையும் பெற்றனர்.

10 நாட்கள் சிறப்பு வழிபாடுகள்

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த பெருவிழாவையொட்டி தினமும் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் இறைப் புகழ்ச்சி வழிபாடும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11 மணிக்கு சிறப்பு திருப்பலியும் நடைபெற உள்ளது.

செப்.7-ல் அன்னை ஆரோக்கிய மாதா தேர்பவனி

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அன்னை ஆரோக்கிய மாதாவின் தேர்பவனி செப்டம்பர் 7-ம் தேதி மாலை நடைபெறுகிறது. இதற்காக சிறப்பு அலங்காரங்களுடன் தயாராகும் தேரில் அன்னை ஆரோக்கிய மாதா எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையை தரிசிக்க உள்ளனர்.

செப்.8-ல் பெருவிழா நிறைவு

தொடர்ந்து செப்டம்பர் 8-ம் தேதி அன்னை ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்று, தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டு 45-வது ஆண்டு பெருவிழா நிறைவு பெறுகிறது.

வெளிமாவட்டங்கள், கேரளாவில் இருந்து பக்தர்கள் வருகை

இந்த பெருவிழாவையொட்டி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புண்ணியவாளன்புரம் திருத்தலத்திற்கு வருகை தந்து வருகின்றனர்.

பல பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக திருத்தலத்திற்கு வந்து அன்னையை தரிசித்து, நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். இதனால் திருத்தல வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விழாக்கோலம் பூண்டுள்ளது.

பெருவிழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வழிபாட்டு ஏற்பாடுகளை திருத்தல நிர்வாகத்தினர் மற்றும் புண்ணியவாளன்புரம் பங்கு மக்கள் இணைந்து சிறப்பாக செய்து வருகின்றனர்.

— நெல்லை செய்தியாளர் சுரேஷ்