மதுரை: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் யாரை ஈடுபடுத்தலாம் என்பது குறித்து மதுரை உட்பட 14 மாவட்ட கலெக்டர்கள் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் மணிவாசகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு ஆசிரியர்களை அனுப்புவது மாணவர்களின் கல்வியையும், தேர்ச்சி விகிதத்தையும் பாதிக்கும்.
தனியார் பள்ளி ஆசிரியர்கள் முழுநேரமாக வகுப்புகளை நடத்தி வரும் நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே இப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால், ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 55 வயதிற்கு மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள், மருத்துவச் சிகிச்சையில் உள்ள ஆசிரியர்களுக்கு கேரளா போன்ற மாநிலங்களில் விலக்கு அளிப்பது போல், தமிழ்நாட்டிலும் விலக்கு வழங்கப்பட வேண்டும்.
மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு 2026 ஆகஸ்ட் மற்றும் 2027 பிப்ரவரி மாதங்களில் கணக்கெடுப்புப் பணியில் விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் பணி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு அனைத்து ஆசிரியர்களையும் ஈடுபடுத்த சட்டத்தில் வழிவகை உள்ளது. ஆசிரியர்களுக்கு தான் அந்த பகுதியின் பொருளாதார நிலை, கள நிலவரம் தெரியும். எந்த ஆசிரியர்களை கணக்கெடுக்கும் பணிக்கு ஈடுபடுத்தலாம்.
ஈடுபடுத்தக்கூடாது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனு தொடர்பாக மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, கரூர் கலெக்டர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.






