ஆலங்குளம்: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே முத்துகிருஷ்ணபேரி வடக்கு தெருவைச் சேர்ந்த லெட்சுமணராஜா மகன் சரவணகுமார் (51) என்பவர் தும்பு மில் நடத்தி வருகிறார்.
இவருக்குச் சொந்தமான தும்பு மில்லில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இந்த தீ விபத்தில் தூத்துக்குடிக்கு ஏற்றுமதி செய்வதற்காக மில்லில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 டன் தும்பு தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்குள் வராததால், சுரண்டை மற்றும் தென்காசி தீயணைப்பு நிலையங்களில் இருந்து கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் மணிகண்டன் தலைமையில், ஆலங்குளம் நிலைய அலுவலர் விஜயன், சுரண்டை நிலைய அலுவலர் ரமேஷ், பயிற்சி நிலைய அலுவலர் முத்துக்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






