நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் ஆய்வு கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

மாமல்லபுரம்: நெம்மேலியில் இயங்கி வரும் நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின், கடல்நீரை உட்கொள்ளும் தொட்டியின் செயல்பாடுகளையும், நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் எதிர்மறை சவ்வூடு பரவல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள எஸ்சிஏடிஏ செயல்பாடுகளையும் முதல்வர் விஜய் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, பேரூரில் அமைக்கப்பட்டு வரும், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். கடல்சார் பணிகளாக, 2500 மில்லி மீட்டர் விட்டமுள்ள எச்டிபிஇ குழாய்கள் கடல்படுக்கையின் அடியில் பதிக்கப்பட்டுள்ளன. இதில்,1200 மீட்டர் மற்றும் 1210 மீட்டர் நீளமுள்ள 2 கடல்நீரை உட்கொணரும் குழாய்கள், 840 மீட்டர் நீளமுள்ள உவர்நீர் வெளியேறும் குழாய் ஆகிய குழாய்களைப் பதிக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

கடல்நீரை உட்கொணரும் கோபுரம் கடலில் பதிக்கப்பட்ட குழாய்களின் இறுதிப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் குழாய்கள் பதிக்கும் பணிகளில் ஒரு பகுதியாக, நீரேற்று நிலையம் மற்றும் நீர்தேக்கத் தொட்டி கட்டமைப்பு அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள், பேரூரிலிருந்து போரூர் வரை 59 கிலோ மீட்டர் நீளத்திற்கு 2000, 1800, 1000 மி.மீ. விட்டமுள்ள குழாய்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இசிஆர்லிருந்து கோவிலஞ்சேரி சந்திப்பு வரை மொத்தம் உள்ள 27.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு, 2000 மில்லி மீட்டர் விட்டமுள்ள குடிநீர்க் குழாய்கள் பதிக்கும் பணிகளில் இதுவரை 7.74 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம், பெருநகர சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அருகாமையிலுள்ள 20 ஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் உள்ள 22.67 லட்சம் மக்கள் பயனடைவார்கள். இதனால் பேரூரில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.