சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் விஜய்யை நேற்று விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டிற்கு முதல்வர் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஆட்சி அமைத்து 100 நாட்கள் வெற்றிகரமாக கடந்திருக்கிறது, அதற்கு வாழ்த்து தெரிவித்து இந்த ஆட்சி ஐந்தாண்டு காலம் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்வதற்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்பதை உறுதிப்படுத்துவதற்கும், முதலமைச்சரை சந்தித்துப் பேசினோம், , போதைப்பொருள் ஒழிப்பு அதிரடிப் படை ஒன்றை உருவாக்கிட வேண்டும் என்றும் தெரிவித்தோம்.
தவெக உள்ளிட்ட அனைத்து தோழமைக் கட்சிகளின் சார்பில் கூட்டணி அமைப்பது தொடர்பாக முதல் கூட்டம் முதல் கட்டமாக நடந்தேறியிருக்கிறது. அதுகுறித்தும் இப்போது முதலமைச்சரோடு நாங்கள் பேசினோம். இன்றைக்கு கூட்டணி அரசில் நாங்கள் அங்கம் வகிப்பதன் மூலம் நாங்களும் ஒரு ஆளும் கட்சி என்கிற அடையாளத்தை பெற்றிருக்கிறோம் என்பது ஒரு வளர்ச்சி. இந்த வளர்ச்சியை தமிழ்நாட்டு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் விருப்பப்படி எங்கள் அரசியல் நிலைப்பாடு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்






