திருச்சி, ஆக.15: திருச்சி மொரைஸ் சிட்டியில் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “மொரைஸ் கார்னிவல்” திருவிழா, ஆகஸ்ட் 14, 15 மற்றும் 16 ஆகிய மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. குடும்பத்துடன் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
விழாவின் முதல் நாளான ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், மொரைஸ் சிட்டி நிர்வாக இயக்குநர் லெரோன் மொரைஸ் கலந்து கொண்டு கார்னிவல் நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக பிரபல திரைப்பட நடிகர் ரியோ ராஜ் மற்றும் நடிகை பிரார்த்தனா ஆகியோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
தொடர்ந்து, கார்னிவலின் இரண்டாம் நாளான இன்று (ஆகஸ்ட் 15) பிரபல பின்னணிப் பாடகர்கள் ஷ்யாம் விஷால் மற்றும் சரத் மேத்யூ ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதேபோல், விழாவின் மூன்றாம் நாளான நாளை (ஆகஸ்ட் 16) விஜய் டிவி புகழ் நகைச்சுவைக் கலைஞர் மதுரை முத்து கலந்து கொண்டு தனது நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்களை மகிழ்விக்க உள்ளார்.
மூன்று நாட்களும் நடைபெறும் இந்த பிரம்மாண்ட கார்னிவலில், பொதுமக்களைக் கவரும் வகையில் மேஜிக் ஷோ, மிமிக்ரி, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.
கார்னிவல் வளாகத்தில் பார்வையாளர்களின் உணவு விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் 50-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெறும் உணவு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனுடன், வணிகம் மற்றும் ஃபேஷன் சார்ந்த பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவற்றை ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
கார் மற்றும் பைக் ஆர்வலர்களைக் கவரும் வகையில், பார்வையாளர்களின் பார்வைக்காக பிரத்யேக ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மற்றும் கார்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிறுவர்களின் பொழுதுபோக்கிற்காக மூன்று நாட்களும் செயல்படும் வகையில் தனிப்பட்ட விளையாட்டுத் திடலும் அமைக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக வந்து பொழுதுபோக்கி மகிழும் வகையில் பல்வேறு அம்சங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த “மொரைஸ் கார்னிவல்” நிகழ்ச்சிக்கு அனுமதி முற்றிலும் இலவசம் என விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து கார்னிவல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, இசை, கலை, நகைச்சுவை, உணவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கண்டு ரசித்து மகிழுமாறு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.






