கேரளாவில் மீண்டும் ஷிகெல்லா நோய் பரவல்: 4 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை

திருவனந்தபுரம்: கேரளத்தில் மீண்டும் ஷிகெல்லா நோய் பரவுகிறது. இந்த நோய் பாதித்த கோட்டயத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேரளத்தில் கோழிக்கோடு, மலப்புரம், திருவனந்தபுரம் உள்பட சில பகுதிகளில் கடந்த சில வருடங்களுக்கு முன் ஷிகெல்லா நோய் பரவத் தொடங்கியது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு 10க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த நோய் கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி பரவி வருகிறது. அசுத்தமான உணவு, குடிநீர் ஆகியவற்றை பயன்படுத்துவது தான் இந்த நோய்க்கான முக்கிய காரணங்களாகும்.

ஷிகெல்லா நோய் பாதித்தால் கடுமையான வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தலைவலி ஆகியவை இருக்கும். சிறுவர்களையும், நோய்வாய்ப்பட்டவர்களையும் தான் இந்த நோய் அதிகமாக தாக்கும். கடந்த சில தினங்களுக்கு முன் கொச்சியில் ஒரு ஓட்டலில் உணவு சாப்பிட்ட சிலருக்கு ஷிகெல்லா நோய் பரவியது. இந்நிலையில் கோட்டயத்தை சேர்ந்த 4 வயது சிறுவனுக்கு இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.