அம்பை தொகுதியை மீண்டும் அதிமுக கோட்டையாக மாற்ற வேண்டும்!
வீரவநல்லூரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் – புதிய இளைஞர்களை அதிகளவில் கட்சியில் இணைக்க வலியுறுத்தல்
வீரவநல்லூர், ஆக. 9:
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வீரவநல்லூர் பேரூராட்சியில், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) செயல்வீரர்கள் கூட்டம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் மருதூர் K. ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பேரூர் கழக செயலாளர் G. முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞர் அணி துணைத் தலைவர் P. ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் P. சௌந்தரராஜன், முன்னாள் எம்.பி., மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் V. ராகவன், புறநகர் மாவட்ட அமைப்புத் தலைவர் P. மாடசாமி, புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் செவல் முத்துசாமி, சேரை ஒன்றிய செயலாளர் பழனிக்குமார், சேரை நகர செயலாளர் S. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
இளைஞர்களை அதிகளவில் கட்சியில் இணைக்க வேண்டும்
கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், அதிமுகவைத் தொடங்கி மக்கள் மத்தியில் வலுவான அரசியல் இயக்கமாக உருவாக்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அவரைத் தொடர்ந்து சிறப்பான ஆட்சியை வழங்கிய புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் வழியில், தற்போது கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி கட்சியை கட்டுக்கோப்புடன் வழிநடத்தி வருவதாக தெரிவித்தனர்.
மேலும், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று சென்ற இசக்கி சுப்பையா அணிமாறியுள்ள நிலையில், எதிர்காலத்தில் மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகலாம் என்றும், அத்தகைய தேர்தலை எதிர்கொள்ள கட்சியினர் தற்போதே தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அம்பாசமுத்திரம் தொகுதியை மீண்டும் அதிமுகவின் வெற்றித் தொகுதியாக மாற்ற வேண்டும் என்றும், இதற்காக ஒவ்வொரு வார்டிலும் கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தி, குறிப்பாக புதிய இளைஞர்களை அதிகளவில் அதிமுகவில் உறுப்பினர்களாக இணைக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கட்சியின் கொள்கைகள், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்து, வரவிருக்கும் தேர்தல்களை வலிமையுடன் எதிர்கொள்ளும் வகையில் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் வீரவநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளின் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இறுதியாக பேரூர் கழக அவைத் தலைவர் துரைராஜ் நன்றி உரையாற்றினார்.






