ஆலங்குளம், ஜூலை 31:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணத்தில் அறுந்து கிடந்த உயர் மின் அழுத்த கம்பியை மிதித்ததில் விவசாயி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடைக்கலப்பட்டணம் வடக்குத் தெருவைச் சேர்ந்த துரைபாண்டியின் மகன் யோவான் ஸ்நானகன் (42) விவசாயியாக இருந்து வந்தார். மேலும், ஆடு, மாடுகள் வளர்ப்பிலும் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி முத்தா பூர்ணா பிரபா, அரசு பள்ளியின் காலை உணவுத் திட்டத்தில் சமையல் பணியாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று யோவான் ஸ்நானகனின் தோட்டத்தில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை அவர் கண்டதும், உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் ஒரு பகுதியில் ஏற்பட்ட பழுதை மட்டும் சரிசெய்து சென்றதாகவும், அருகில் அறுந்து கிடந்த மற்றொரு மின்கம்பியை அகற்றாமல் விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை தனது மாடுகளுக்காக புல் அறுப்பதற்காக தோட்டத்திற்கு சென்ற யோவான் ஸ்நானகன், நேற்று பணியின்போது விடப்பட்டிருந்த சிறிய கம்பியை அகற்ற முயன்றுள்ளார். அப்போது அருகில் அறுந்து கிடந்த மின்கம்பியை தவறுதலாக மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பாவூர்சத்திரம் போலீசாருக்கும் மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி, சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் அடைக்கலப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மின்வாரிய அலட்சியமா? அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பரிதாப பலி






