திருநெல்வேலி, ஜூலை 28: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வரவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், அதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என வெளியிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் கருப்புக்கொடி காட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளரும், சமூக நீதிக்கான வழக்கறிஞருமான ப. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள் கருப்புக்கொடி ஏந்தியதுடன், தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாட வேண்டும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும் என்றும், பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதல் இடம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு ஆளுநர் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம், துணைவேந்தர் மற்றும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தை சமூக நீதிக்கான வழக்கறிஞர் பிரபாகர் ஒருங்கிணைத்தார். இதில் மூத்த வழக்கறிஞர்கள் அப்துல் நிஜாம், இளமாறன் கோபால், கொம்பையா, உத்தர நாயகம், கதிரவன், சிலம்பரசன், அசோக் குமார் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் தமிழர் சட்ட இயக்கத் தலைவர் பார்த்திபன், சரவண டிக்சன், ஜோதி முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடும் அறிவிப்புக்கு எதிர்ப்பு: நெல்லை நீதிமன்ற வழக்கறிஞர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்






