மதுரை, ஜூலை 5:
தென் தமிழகத்தில் முதன்முறையாக, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், பிறவிக் குறைபாடான மைக்ரோடியா (Microtia) பாதிப்புடன் பிறந்த 16 வயது சிறுவனுக்கு, விலா எலும்பிலிருந்து எடுக்கப்பட்ட குருத்தெலும்பைப் பயன்படுத்தி ஒரே கட்டத்தில் 3D காது மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
பொதுவாக பல கட்டங்களாக நடைபெறும் இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை ஒரே அமர்வில் வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் நோயாளியின் வலி, மருத்துவமனையில் தங்கும் காலம் மற்றும் குணமடையும் காலம் ஆகியவை கணிசமாகக் குறைந்துள்ளன.
இந்த அறுவை சிகிச்சைக்கு ஜப்பானில் சிறப்புப் பயிற்சி பெற்ற மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) துறை தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் டி.ஆர். நாகேஸ்வரன் தலைமையிலான மருத்துவக் குழு செயல்பட்டது.
இதுகுறித்து டாக்டர் நாகேஸ்வரன் கூறியதாவது:
“சுமார் 10 ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தை மைக்ரோடியா என்ற பிறவிக் குறைபாட்டுடன் பிறக்கிறது. குறிப்பாக நெருங்கிய இரத்த உறவினர்களுக்குள் நடைபெறும் திருமணங்கள் காரணமாக தமிழ்நாட்டில் இதன் பாதிப்பு சற்று அதிகமாகக் காணப்படுகிறது. இந்தக் குறைபாடு குழந்தைகளுக்கு உடல்ரீதியான சிக்கல்களுடன், மனரீதியான பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
இந்த அறுவை சிகிச்சையில் சிறுவனின் நான்கு விலா எலும்புகளிலிருந்து தேவையான அளவு குருத்தெலும்பு மட்டும் எடுக்கப்பட்டது. இதனால் உடலில் மிகச்சிறிய தழும்பு மட்டுமே ஏற்படும். மேலும், விலா எலும்புகளின் வலிமையோ அல்லது மார்புக் கூட்டின் நிலைத்தன்மையோ எந்த வகையிலும் பாதிக்கப்படாது,” என்றார்.
மைக்ரோடியாவுடன் தொடர்புடைய செவித்திறன் குறைபாட்டை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் பெரும்பாலும் சரிசெய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். காக்லியர் இம்ப்ளான்ட் உள்ளிட்ட நவீன செவித்திறன் மீட்பு சிகிச்சைகள் மூலம் பல குழந்தைகளுக்கு கேட்கும் திறனை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடிகிறது என்றும் கூறினார்.
மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகி டாக்டர் பி. கண்ணன் கூறுகையில், “தென் தமிழகத்தில் இவ்வளவு சிக்கலான 3D காது மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட எங்கள் மருத்துவக் குழுவின் சாதனை பெருமைக்குரியது. இதுபோன்ற உயர்தர மருத்துவ சேவைகளை தொடர்ந்து மக்களுக்கு வழங்குவதில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை உறுதியாக செயல்பட்டு வருகிறது,” என்றார்
தென் தமிழகத்தில் முதன்முறை: விலா குருத்தெலும்பைப் பயன்படுத்தி 16 வயது சிறுவனுக்கு ஒரே கட்டத்தில் காது மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை






