ஆலங்குளம், ஜூன் 30:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகியும், ஆலங்குளம் ஒன்றியக் குழு உறுப்பினருமான அரிநாராயணன் (60) என்பவர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மருதம்புத்தூரைச் சேர்ந்த அரிநாராயணன் வழக்கறிஞராகவும் செயல்பட்டு வருவதுடன், அப்பகுதியில் ஒரு மெட்ரிக் பள்ளி மற்றும் ஆலங்குளம்–அம்பாசமுத்திரம் சாலையில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சொசைட்டி ஒன்றையும் நிர்வகித்து வருகிறார்.
இந்த நிலையில், அந்த சொசைட்டியில் அண்மையில் பணியில் சேர்ந்த இளம்பெண்ணுக்கு அவர் பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இளம்பெண்ணின் பெற்றோர் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், அரிநாராயணன் மீது சம்பந்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அரிநாராயணன் ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






